Monday, April 19, 2010

ஜி. நாகராஜன் குறத்தி முடுக்கு - உடலின் ஆன்மா. - பிரவீண்


ஜி. நாகராஜன் குறத்தி முடுக்கு - உடலின் ஆன்மா.


நாவல் என்பதே ஒரு மத்தியதர வர்க்க வடிவம் என அறியப்பட்ட காலம் ஒன்று உண்டு.இங்கு மத்தியதர வர்க்கம் என்பது ஒரு பொருளியல் மட்ட மக்கள் திரளை குறிக்கவில்லை.மத்தியதர வர்க்கம் என்பது அது சார்ந்த ஒரு மன நிலை, உறைந்த மதிப்பீடுகள் , , தினசரித்தன்மை முதலியவற்றையும் சுட்டுகிறது. தமிழ்ப் புனைவு வெளியில் குறிப்பாக மணிக்கொடி – எழுத்து என்ற தடத்திலான ஒரு நவீனத்துவ உருவாக்கத்தில் இந்த மத்தியதர வர்க்க மனோபாவத்தின் மேலாண்மையை மறுப்பதற்கில்லை.குறிப்பாக தமிழ் நாவல் வெளியில் மனம் சார்ந்த நெருக்கடிகளின் நூற்றுக் கணக்கான கோலங்கள் காணக்கிடைக்கும் அளவுக்கு உடல் சாந்த வன்முறைகள் , அதன் மீதான சமூக கலாச்சார நிறுவனங்ளின் ஒடுக்குமுறைகள் குறித்த கவனஙகளை காண இயலுவதில்லை. வரலாறு எனும் பெரும் திரையில் மனித உடலின் வலியும் துடிப்பும் மிக்க நடனத்தைத் தமிழ் நாவல் மிக அரிதாகவே தொடுகிறது.வடிவத்தில் எத்தனைப் புதுத் திறப்புகள் வந்தாலும் அனுபவம் சார்ந்த தீவிரமான விரிந்த வாக்கைத் தளங்கள் இல்லாதபோது கலைரீதியாக ஒரு படைப்பு கொள்ளும் முடக்கம் இரங்கத்தக்கது. ஆனால் உலக நாவல் மேற்குறித்த நடுத்தர வர்க்கத் தன்மையைத் தாண்டி எத்தனையோ உயரங்களைத் தொட்டுவிட்டது. நவீன வாழ்க்கையின் நுண்களங்களைத் தீண்டவும், , சமூகம் வரலாறு பண்பாடு என்ற பின்னலான வெளியில் மனித சலனங்களை பிரதிபலிக்கவும், வாழ்வின் எல்லையின்மையை அகலத் தழுவி விரியும் விவாத வெளியை கட்டமைக்கவும் மிக நெகிழ்ந்ததும் உரையாடல் தன்மை வாய்ந்ததுமான ஓர் உயர் கலை வடிவம் நாவல்தான் என்பதை உலக நாவல் வரலாறு நிரூபித்திருக்கிறது.தமிழ் நவீனத்துவத்தின் கட்டுபெட்டித் தனங்களுக்கு எதிராக, உள்ளிருந்து எழுந்த தீவிர குரல்களாக வெளிப்பட்ட ஜி. நாகராஜன், பிரமிள் முதலியோர் சராசரித் தன்மைக்கு எதிரான தங்கள் கவர்ச்சிமிகு வாழ்விலிருந்தும் ஆளுமையிலிருந்தும் நம்மை ஊடுருவுகின்றனர். இங்கு ஜி.நாகராஜனை எடுத்துக் கொள்ளும் போது குடுமப எல்லைகள் தாண்டாத ஒரு தமிழ் நவீனத்துவத்திற்குள் உருவாகி வந்த நாவலின் நிறுவப்பட்ட மரபுகளுக்கு எதிராக அவரது பயணம் தொடங்குகிறது. ஜி. நா. வின் படைப்புலகம் முதலில் பௌதிகமான நிலைமைகளில் இயங்காத நவீனத்துவ புனைவுகளின் மனவெளியிலிருந்து, குருதியும் தசையுமாய் அதிர்ந்து கொண்டிருக்கும் சமூக எதார்த்தங்களின் அடிமட்டத்திற்கு தரைஇறங்குகிறது.அப்படித்தான் குறத்தி முடுக்கு தமிழ்ப்புனைவில் ஒரு புதிய திறப்பாக வருகிறது. அது காட்டும் உலகம் நவீனத்துவத்தின் அறிவார்த்த நாகரீகத்தின் அதிர்ச்சிமிக்க பின்தோற்றம்.வரலாற்றின் இக்கட்டத்தில் மனித உடல்களின் புதிய அதிர்வுகளை அது ஏந்துகிறது. அங்கு நவீன யுகத்தின் கோட்பாட்டுத் தர்க்கங்களும் , கற்பித லட்சியங்களும் சிதறிக் கொண்டிருக்கின்றன. சுதந்திரம், சட்டம், சமூக ஒழுங்கு, காவல், நீதி, நிர்வாகம் என்ற நவீன சமூக கண்ணாடிக் கவர்ச்சிகளின் ஆழ்த்தில் ஒளிந்திருக்கும் கைப்பையும் வன்மங்களையும் அது அகழ்ந்தெடுக்கிறது. குறத்தி முடுக்குவில் பேசப்படுவன எல்லாம் உடல்கள். அவை இந்த நவீன சமூக அதிகாரங்களின் அதிகபட்ச வன்முறைகளுடன் தம் அடிப்படை வாழ்விச்சைகளோடு மோதியபடியே தம் தினசரியில் நவீன வாழ்வின் புதிர்மிக்க நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன.இதுதான் குறத்தி முடுக்கின் களம்.. இதன் மீதான ஒரு கோடிட்டுக் காட்டல்தான் தங்கம் என்ற பாலியல் தொழிலாளிக்கும் பெயர் சுட்டப்படாத ஒரு பத்திரிக்கையாளனுக்கும் இடையிலான, மரபான வடிவங்களில் பிடிபடாத ஒரு காதலின் புதிர்மிக்க சலனங்கள்.


இந்தப் பத்திரிக்கையாளன் வாழ்க்கை பற்றி சில தெளிவுகள் கொண்டவன். காமத்தை ஒரு இச்சை தீர்ப்பு என்பதுக்கு அப்பால், அதில் காதலின் மாய சிறகுகள் முளைப்பதற்கான சாத்தியங்களை ஏற்க மறுப்பவன்.
ஆனால் தங்கதுடனான உறவில் இவனது அனைத்து தர்க்கங்களும் சிக்கலடைந்தபடியே வருகின்றன. இச்சை என்ற எளிய கோலத்தில் தொடங்கும் அவன் தஙத்துடனான உறவில் மெல்ல மெல்ல காதலின் உயர்படி நிலைகளைக் கண்டடைகிறான். அனால் இவனது குணவார்ப்பின் எதிர்நிலைதான் தங்கம்.அவள் இறுதி வரை சமநிலை குலையாத ஆளுமை வார்ப்பு பெற்றவள்.அவளது காதல் எத்தகையது...அது உணர்ச்சிகளின் முகடுகளும் அகடுகளும் அற்ற ஒரு நேர்க்கோடாக இருக்கிறது.ஆனால் அவன் நாவல் முழுக்க இடறிக் கொண்டே இருக்க சலனமற்ற ஒரு புதிராக தங்கம் இறுதிவரை நிலைகொள்கிறாள். இந்த முரண் இவ்விருவருக்கிடையே வாழ்வின் அற்புதமான பகடையாட்டத்தை ஆடிக் காண்பிக்கிறது.இங்கு தான் ஜி. நாகராஜன் வாழ்க்கையை மிக அரிய கோணங்களில் நமக்கு வாசித்து காட்டுகிறார்.


மேலும்...
உயர்ந்த கலைப்படைப்புகள் பசி, காமம் முதலிய மனிதத்துவத்தின் மிக ஆதாரமான பிரச்சனைகளையே மைய்யமிடுகின்றன. சிலம்பு மணிமேகலை போன்ற தமிழ்ப் பேரிலக்கியங்கள் இதன் உயர் லட்ச்சிய வடிவங்கள் எனலாம். மனிதன் வரலாற்றின் வழி வந்தவன். இயற்கையிலிருந்தும் உயிரியல்புகளிலிருந்தும் மிகச் சேய்மைபட்ட கலாச்சார வாழ்வியலை வந்தடைந்திருப்பவன். இந்த நவீன மனிதனுக்குள் உள்ளுறைந்திருக்கும் தொல்பண்பையும் உயிரிச்சைகளில் கலாச்சார மயக்கங்களற்ற நிர்வாணத்தன்மையையும் வெளிக்கொணரத்தான் சிறந்த கலைப்படைப்புகள் முயல்கின்றன. மனிதனுக்குள் காணாமல் போன தொல்மனிதனை தொட்டுவிட ஒருவகையில் இலக்கியங்கள் முயல்கின்றன. ஜி. நா. வின் குறத்தி முடுக்கு உள்ளிட்ட படைப்புகள் இந்த திசையில் செல்வதாகத்தான் படுகிறது. குறத்தி முடுக்குவில் மீண்டும் மீண்டும் பேசப்படுவது காமமும் பசியும்தான்.


மனித உடல் ஓர் உயிரியல் அமைப்பு மட்டுமல்ல.அது ஒரு சமூக வரலாற்று பண்பாட்டுக் கட்டமைப்பாக இருக்கிறது.சமூக மதிப்பீடுகளை கடத்தும் ஊடகமாகவும் கலாச்சார புனைவுகளைக் கற்பிதங்களை ஏற்று அதன் ஒழுங்குமுறைகளை , நடத்தை விதிமுறைகளை பிரதிபலிக்கும் பாத்திரங்களாகவும் மனித உடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுக்க்களிலிருந்து விடுவித்து மனித உடலின் ஆதி இயற்கைத்தன்மையை, வேட்கையை அதன் குழந்தைமையை, இசைமையை மீட்ட பாலியலை மையமிடும் சிறந்த கலைப்படைப்புகள் முயல்கின்றன. பெண்ணியவாதிகள் இக்கோணத்தில் உடலரசியல் என்ற கூரிய பரிமாணத்தில் பேசி வருவதை நாம் அறிவோம்.
குறத்தி முடுக்குவில் ஆளப்படும் பாலியலும் இந்த தளத்தை நோக்கி நகர்ந்து வருவதை உணர முடிகிறது .மனித சமூகத்தில் காமம் ஒரு இயற்கை நடவடிக்கையாயன்றி பால் சார், பண்பாடு சார் புனைவுகளும் அதிகாரங்களும் கொண்டவையாய் நிகழ்கிறது. பதற்றங்களும் தன்முனைப்பும் நிறைந்த இந்த நாடகீயமான காமத்தின் ஆழத்தில் மனிதத்துவத்தின் துடிப்புமிக்க களங்கமற்ற பால் விழைவை ஜி. நா.வின் எழுத்து எப்போதும் மீட்டெடுக்கிறது. அரசியல்மயமாகப்பட்ட பாலியலை திரைவிலக்கி அதன் ஆழத்தில் துளிர்க்கும் ஆதிமனத்தின் அன்பை அது எப்போதும் துளிர்க்கச்செய்கிறது.குறத்தி முடுக்குவின் எந்த கதாபாத்திரங்களும் முழுமையாக குணவார்ப்பு பெற்றவையல்ல. அவை மூட்டமான நிழலுருவங்களாகவே வந்து செல்கின்றன, ஒவ்வொரு வாழ்விலிருந்தும் ஜி. நா காண்பிப்பது ஒரு வெட்டுக் காட்ச்சி மட்டுமே. அனால் அவை இட்டு நிரப்ப வேண்டிய கணமான இடைவெளிகளை வாசகத் தரப்பில் நிறுத்துகின்றன.ஒவ்வொரு பாத்திரமும் காமத்தின் ஆழத்தில் ஒளிரும் காதலையும் காதலின் பாசாங்கில் மறைந்துள்ள காமத்தையும் மாறி மாறி வெளிப்படுத்தும் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.


பாலியலை கலையின் ஓர் உயிர்ப்பகுதியாக வைத்துப் பேணிய கலைப்பாரம்பரியம் நமது எனினும் பாலியலை மனித அறிவாதிக்கத்திலிருந்து விடுதலை செய்யும் முயற்சிகள் மிக அரிதாகவே நிகழ்ந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டு புனைகதைப் பரப்பை நோக்கும்போது கு.ப.ரா., தி.ஜா., ஜெயகாந்தன் முதலிய முன்னணிப் படைப்பாளிகள் நம் நினைவுக்கு வரலாம். கு.பா.ரா பாலியலைத் தாண்டிய இலட்சிய நிலைப்படுத்தப்பட்ட காதலைத்தான் முன்வைக்கிறார். தி.ஜா. பாலியலை எழுதும்போது அதில் ஒரு நிலமானிய கால ரசனை ரேகையொன்று ஓடுவதை மறுப்பதற்கில்லை. ஜெயகாந்தன் பாலியலை கையாளும்போதெல்லாம் வெளிப்படும் அவரது அறிவார்த்த முனைப்புகள் சலிப்பூட்டக் கூடியது. முழுக்க முழுக்க ஒரு விளிம்பு நிலை வாழ்விலிருந்து, பாலியலின் அரசியலை உரித்து, மனித இயல்பூக்கங்களை பேச விழையும் ஜி. நாகராஜனின் படைப்புலகம் முன்குறித்த எதன் சாயலுமற்ற முன்னுதாரணங்களற்ற புதிய பிரதேசத்தை அறிமுகப்படுத்துகிறது.குறத்தி முடுக்குவின் இறுதிப் பகுதி ஒரு உருவகமான காட்சியோடு நிறைவுறுகிறது. தனக்குள் காதலின் பேரலைகளை எழுப்பிவிட்டு தன் பழைய கணவனோடு வாழச்சென்றுவிட்ட தங்கத்தைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்த அந்தப் பத்திரிக்கையாளன் அவளது வீடு வரை சென்று ஒரு விருந்தாளியின் அசௌகரியத்தோடும் அந்நியத்தோடும் இருந்துவிட்டு அறைக்குத் திரும்புகிறான். தங்கத்தின் தேர்வுகள் அவனது தர்க்கங்கள் அனைத்தையும் சிதறடிக்கின்றன. வாழ்வின் எந்த நிலையிலும் குலையாத அவளது சமனிலை
முன் அவன் கொந்தளிக்கிறான். ஆற்றாமை..ஏமாற்றம்…அறையில் அவனுக்குத் தூக்கமில்லை.இறங்கி வெளியே நடக்கிறான்… தொலைவில் ஒரு மின்னல் வெட்டுகிறது..’ தொலைவில் நிகழ்ந்த ஒரு மின்பரிமாற்றம்’ என்கிறார் ஜி. நா. அது அவனுக்குள் நிகழ்ந்துள்ள பெரும் குணமாற்றத்தை சூசகமாக உணர்த்துகிறதா. மின்னல் வெட்டிவிட்டது.ஆனால் இடிச்சத்தம் இன்னும் கேட்கவில்லை. தான் எவ்வளவு மாறிவிட்டோம் என்பதை அவன் உணர்கிறான்.ஆனால் அதன் தர்க்கம் இன்னும் அவனுக்குப் புலப்படவில்லை. மழை அடித்துப் பேய வேண்டும் என நினைத்துக்கொள்கிறான். அவன் மனதை நிரப்பும் அந்த கணமான வெக்கையை அது ஒன்றே அப்போதைக்குப் போக்க முடியும்.

4 comments:

 1. நல்லொதொரு இலக்கிய விமர்சனம். யதேச்சையாக இதனை படிக்க நேர்ந்தது. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  நன்றி

  ReplyDelete
 2. ஜமாலன் தங்களின் ஊக்கத்திற்கும் அன்பிற்கும் நன்றி

  தமிழினி தங்களின் பயனுள்ள தகவலுக்கு நன்றி..

  ReplyDelete
 3. நல்ல விமர்சனம். தற்போதுதான் 'குறத்தி முடுக்'கை படித்து முடித்தேன். 'நாளை மற்றுமொறு நாளே'யும் படித்து முடித்தேன். ஜி. நாகராஜனை இன்னமும் கூர்ந்து படிப்பேன் என நினைக்கிறேன். அவருடைய வேறு நாவல்கள் ஏதேனும் பரிந்துரை செய்ய இயலுமா?

  ReplyDelete
 4. உண்மைகளின் அடுக்களை அஞ்சரை பெட்டியாக 'குறத்திகளின் முடுக்கு' மற்றும் 'நாளை மற்றுமொறு நாளே' என்ற படைப்புகளின் பிரவேசம்!!

  ReplyDelete