Saturday, April 3, 2010

பட்டாம்பூச்சி விளைவு (Butterfly Effect)- பிரவீண்


மறை நூலின் சொற்கள் இசைக்கப்பட்டபோது
வரலாற்றின் மீது பறந்து கொண்டிருந்தது ஒரு பட்டாம்பூச்சி।

கரையொதுங்கிய திமிங்கல விழியில்
அகால வானம் நடுக்குற்ற கணம்
நம் உறவின் நாணல்கள்
இறுதியாய் அசைந்தன.

நூற்றாண்டுகளின் புத்தன் தன் தியான விழிகள் திறந்தபோது
நகரின் மையத்தில் அவனைத் துப்பாக்கிகள் குறிவைத்தன

வேனிற் கால இரவு வானை
எரிகல் ஒன்று கிழித்தபோது
யாருடைய காதலோ முறிந்தது

பார்த்தலொமியுவின் கப்பல் நன்னம்பிக்கை முனையைத் தொட்டபோது
கடல்களுக்கு இடையிலான யுத்தங்கள் தொடங்கின

திசை பிறழ்ந்த நோவாவின் புறா
நமது நூற்றாண்டின் மேல் பறந்த போது
உலகம் ஒரு போன்சாயானது.

டினோசர் முட்டைகளில் இருந்து
மனிதர்கள் வெளிவந்தபோது
கடவுளின் இரண்டாம் வருகை நிகழ்ந்தது

ஒளி ஆண்டுகளின் தொலைவில்
யாரும் அறியாமல் ஒரு நட்சத்திரம்
தன் வாழ்வை முடித்துகொண்டபோது
எனது காலை புலர்ந்தது.

நானறியாத வனமொன்றில்
பிரபஞ்ச விழியென மிதக்கும் பட்டாம்பூச்சியே
எனது இன்றைய நாளின் மீது
நீ தூவிய சொற்கள் என்ன.

4 comments:

  1. "நானறியாத வனமொன்றில்
    பிரபஞ்ச விழியென மிதக்கும் பட்டாம்பூச்சியே
    எனது இன்றைய நாளின் மீது
    நீ தூவிய சொற்கள் என்ன"

    சிறப்பான வார்த்தைகள்

    ReplyDelete
  2. excellent study on human life ,really i appriciate praveen's poem .i could feel philosophycal touch it's every word.


    meera

    ReplyDelete
  3. thanq for the appreciation...pravin

    ReplyDelete
  4. ப்ரவீண் வேற் கவிதை எழுதுப்பா ....



    நிறைய கவிதைகளை எதிர்பார்க்கிறோம்

    ....ரவி

    ReplyDelete