Monday, April 5, 2010

சா.தேவதாஸின் சார்லஸ் டார்வின்: பரிணாமத்தின் பரிமாணங்கள் – அறிவியல் மற்றும் உலகக் கண்ணோட்டத்துக்கான நூல் - ராஜாஜி




பத்தொன்பதாம் நூற்றாண்டைய ஐரோப்பாவின் இயல்பை இரண்டு விசயங்கள் பாதித்தன எனலாம். ஒன்று காரல் மார்க்சின் கம்யூனிச பூதம்; இன்னொன்று டார்வினின் பரிணாம கோட்பாடு. தவிர்க்க இயலாமல் நமது அறிவியல் பாடப்புத்தகத்தில் வரும் எளிய அறிமுகத்தை தாண்டி டார்வினின் பரிணாம கோட்பாடு ஒரு முக்கிய பொருளாக எங்கும் விவாதிக்கப்படவில்லை. படித்து மறந்து விட கற்பிக்கப்படும் நமது பாடத்திட்டத்தில் காத்திரமான ஒரு அறிவியல் கொள்கை அதன் மதிப்பையும் வீச்சையும் இழந்து நிற்கிறது. தமிழில் டார்வின் பற்றிய முதல் நூல் 1953-இல் தான் வெளிவந்தது. இது ஏறக்குறைய டார்வினின் உயிரினங்களின் தோற்றம் நூல் வெளியாகி நூறு வருடங்கள் கடந்த பிறகு நடந்துள்ளது. இந்த எதார்த்தத்தின் பின்னணியில் சா.தேவதாஸின் சார்லஸ் டார்வின்: பரிணாமத்தின் பரிமாணங்கள் நூல் முக்கிய கவனம் பெறுகிறது. ஆழி பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது. முல்லாக்களாலும் பாதிரிகளாலும் இன்று வரையிலும் மூர்க்கத்துடன் எதிர்கொள்ளப்படும் டார்வின் அவர் வாழ்ந்த காலத்தில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற பிரச்சனை சார்ந்த இச்சிறுவிவாதத்தில் கூட ஊடுபடவில்லை என்ற ஆச்சரியமான உன்மையை நூலில் குறிப்பிட்டுள்ளார் ஆசிரியர்.



ஒரு வேளிப்படையான விவாதத்துக்கு மதவாதிகளின் கூச்சல் பெரும் தடையென அவர் உணர்ந்திருக்கலாம். அடிப்படையில் இத்தகைய கூச்சல் ஒரு விஷச்சுழி. அடுத்தடுத்த ஆய்வு முன்னேற்றத்திற்கு எழ விடாமல் பின்னால் இழுப்பவை. மனித சமூகத்தின் ஆற்றலிலும் அறிவியலிலும் அபார நம்பிக்கை கொண்ட டார்வின் மதவாதிகளை கவனிக்கும் பொறுப்பை அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்லவும் எண்ணியிருக்கலாம். பரிணாமக் கோட்பாடு என்ற அறிவியல் வளர்ச்சிக்கு டார்வின் மட்டுமே காரணம் எனும் அறியாமையில் மதவாதிகள் டார்வினை குறிவைத்து தாக்குகிறார்கள். டார்வின் மட்டுமல்ல பரிணாமக் கோட்பாடினை வளர்த்தெடுத்தவர்கள் அவர் காலத்தில் வாழ்ந்தவர்களில் நிறைய பேர். சார்லஸ் லயல் மற்றும் ஆல்பிரட் ரக்ஸல் வாலஸ் ஆகியோரின் பங்களிப்பும் குறிப்பிடும்படியானவை என்கிறார் நூலாசிரியர், “ஆரம்பத்தின் தடயங்களோ முடிவுக்கான சாத்தியமோ அற்ற பூமி ... கோடிக்கணக்கான ஆண்டுகள் பழமையானது” (பக்.81) என்று 1830-இல் லயல் முன்மொழிந்துள்ளார். இது ஆதியாகம் கணிக்கும் காலத்தின் பழமையை கேள்விக்குள்ளாகுகிறது. டார்வினின் இயற்கை தேர்வு தனிச்சிறப்பான ஒன்று.



சமகாலத்தவரான மார்க்சுடன் டார்வினுக்கு இருந்த உறவு மிக அழகானது என்று குறிப்பிடுகிறார் நூலாசிரியர். மார்க்ஸ் தனது மூலதனத்தின் முதல் பகுதியை முதலில் டார்வினுக்கு அளிக்கிறார். அதனை டார்வின் உவகையுடன் பெற்றுக் கொள்கிறார். பிறிதொரு சந்தர்பத்தில் இதனை குறிப்பிடும் ஏங்கல்ஸ் மார்க்ஸின் தத்துவமும் டார்வினின் கோட்பாடுகளும் ஒன்று மற்றொன்றை இட்டு நிரப்புவதாக உள்ளது என்று பெருமிதம் கொள்கிறார். கற்பனாவாத சோசலிசமும் விஞ்ஞான சோசலிசமும் நூலில் ஏங்கல்ஸ் டார்வினை மனம் திறந்து பாராட்டியுள்ளதை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.



“இயற்கை இயங்கியல் ரீதியில் செயல்படுகிறது; அப்பாலை தத்துவ ரீதியில் அல்ல .. நிரந்தரமாக தொடரும் சுழற்சியின் நித்திய ஒருமையில் அது செல்வதில்லை, மாறாக உண்மையான வரலாற்றியல் பரிணாமம் மூலமாகச் செல்கிறது.இதைப் பொறுத்து, எல்லோருக்கும் முன்பாக டார்வினை நிறுத்த வேண்டும்.. அனைத்து அங்கக உயிர்கள், தாவரங்கள், விலங்குகள் மற்றும் மனிதனே கூட லட்சக்கணக்கான ஆண்டுகளின் பரிணாம நிகழ்ச்சிப் போக்கின் விளைவுகளே எனும் தனது ஆதாரத்தால் இயற்கையின் அப்பாலைத் தத்துவார்த்த கருத்தமைவுக்கு பெரும் அடி கொடுத்தார். ” பக். 63)

டார்வின் வரையறுத்த ’தகுதியுள்ளது தங்கி நிற்கும்’ என்ற தாவரங்கள்/ விலங்குகளின் உலகில் காணப்படும் போக்கை சமூக தளத்தில் முதலாளித்துவ சுரண்டலை நியாயப்படுத்தும் நோக்கிற்கு பயன்படுத்துவதை நூலாசிரியர் கடுமையாக எதிர்க்கிறார். சமூக டார்வினியவாதிகள் சிலரின் வியாக்கியானங்கள் இதற்கு உதவும்படி இருப்பதை நூலில் விமர்சிக்கிறார்.

‘பரிணாமத்தின் திசைவழிகள்’ , அழிதல்/உருவாதல்/பயணித்தல்’, ’உயிரினத்தின் உச்சம் மண்புழுதான் மனிதன் அல்ல’, ‘ டார்வினும் மார்க்சும்’ ஆகிய அத்தியாயங்கள் முக்கியமானவை. டார்வினின் இளமைக் காலம், கடிதஙள், தொடர்புகள், உறவுகள் பற்றிய பதிவுகளில் வெளிப்படும் நுட்பமும் கூர்மையும் அவருடைய ஆய்வு சார்ந்த தகவல்களில் காணப்படவில்லை.இரண்டாம் பாகமாக அமைந்துள்ள மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் நூலின் இயல்பு ஓட்டத்தோடு சங்கமிக்க மறுக்கின்றன. நவீன காலகட்டத்தில் மதத்தின் இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள அறிவியல் கருத்துகளை வளைக்கும் சதிகளுக்கு நமது சூழலில் பஞ்சமில்லை. நூலில் தேவதாஸ் அத்தகைய திரிபுகள் சிலவற்றை சுட்டிக்காட்டி எச்சரிக்கிறார்.



முழுமையான அறிவியல் மனம் படைத்தவரின் ஆக்கம் என்ற கூடுதல் தகுதியுடன் வந்துள்ள இந்நூலை அறிவியல் மனப்பான்மையும் பகுத்தறிவு உலகக் கண்ணோட்டத்தையும் பெற விரும்பும் யாருக்கும் பரிந்துரைக்கலாம்.

No comments:

Post a Comment