Friday, April 2, 2010
பனிமுலை படைப்பிலக்கியக் கூட்டம் - ஏப்ரல் இரண்டு 2010
பனிமுலை அமைப்பின் படைப்பிலக்கிய கூட்டம் 20101 ஏப்ரல் ரெண்டாம் தேதி மாலை நான்கு மணிக்கு காந்தி மண்டபத்தில் கலை இலக்கியத்துக்கு உரித்தான தீவிரத்தன்மை மற்றும் எளிமையுடன் நடந்தேறியது. ராஜாஜி, பிரவீன், செந்தில் பாபு, நரன், ரவிச்சந்திரன், பெரியசாமி, ஜெய்கணேஷ், தமிழ்ச்செல்வன், மற்றும் ஆர்.அபிலாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பங்கேற்பாளர்களின் அறிமுகத்துக்கு பிறகு ஆர்.அபிலாஷ் சமகால பிரிட்டிஷ் கவிஞர் ஜார்ஜ் சிர்ட்டிஷின் மறத்தல் மற்றும் அப்பா என்னை வயலுக்கு குறுக்கே ஏந்திப் போகிறார் ஆகிய மொழிபெயர்ப்பு கவிதைகளை வாசித்தார். முதலில் மறத்தல் வாசிக்கப்பட்டது. இக்கவிதையின் “சுவர்க்கத்திலிருந்து நீளும் ஒரு கரம்” என்ற வரியில் இருந்து ஆரம்பித்த விவாதம் மேற்கத்திய இலக்கியத்தில் இழந்த சுவர்க்கம் என்பது ஒரு முக்கிய படிமமாக பயன்படுத்தப்பட்டு வருவதை முன்வைத்து மேலும் வளர்ந்தது. கவிதையின் விவரணை அபாரமாக உள்ளதாக பிரவீன் தெரிவித்தார். “உயரத் தூக்கப்பட்டு பத்திரத்துக்கு பிறகு சுழற்றப்படுவதிலா?” என்ற வரியை ஜெய்கணேஷ் சிலாகித்தார். விவாதம் இக்கவிதையில் அம்மா குறித்து வரும் நினைவுக் குறிப்புகளை நோக்கி குவிந்து கொண்டிருந்த போது தமிழ்ச்செல்வன் முற்றிலும் மாறுபட்ட ஒரு கோணத்தை கொண்டு வந்தார். இக்கவிதை அம்மாவுக்கும் மகனுக்குமான பாலுறவை குறித்த கவிதை என்றும், இந்த கண்னோட்டத்தில் படிக்கும் போது ஏராளமான ஆற்றல் மிக்க படிமங்கள் கவிதையில் நமக்கு தெரிய வரும் என்று அவர் அழுத்தமாக பேசினார். ஆனால் நரன், பிரவீன் உள்ளிட்ட பெரும்பாலான பார்வையாளர்கள் இதனை மறுத்து பேசினர். நரன் குறிப்பாக ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் தனிப்பட்ட புரிதல் உண்டு; ஒரு ஐரோப்பிய கவிதையில் போரில் இருந்து மீளும் இளைஞன் அம்மாவை கட்டிப் பிடிக்கிறான் என்றால் நாம அதை பாலியல் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்றார். பிரவீன் இதனை ஆதரிக்க தமிழ்ச்செல்வன் தான் பண்பாட்டு விழுமியங்களை மறுப்பதாக சொல்லி, அத்தனை மனத்தடைகளையும் தூக்கிப் போட்டு விட்டு இக்கவிதைக்குள் நுழைய வேண்டும் என்று ஆவேசமாக சர்ச்சித்தார். பிறகு விவாதம் மீண்டும் ஒரு மைய புள்ளிக்கு கொண்டு வரப்பட்டு, சிர்ட்டெஷின் அடுத்த மொழியாக்க கவிதை வாசிக்கப்பட்டது. இக்கவிதையை முந்தினதோடு ஒப்பிட்ட பிரவீன் இதில் உள்ள நிலக்காட்சி குறிப்புகள் குறித்து பேசினார். ஜெய்கணேஷ் மறத்தல் கவிதைகள் இத்தகைய நிலக்காட்சி குறிப்புகள் இல்லாததை வியந்து குறிப்பிட்டார். பிரவீன் அடுத்து இக்கவிதையில் அப்பா உணர்வு தளத்தில் அல்லாமல ஒரு மனவியல் தளத்தில் அணுகப்படுவதை குறிப்பிட்டார். ரவிச்சந்திரன் இக்கவிதையில் உள்ள பயணப் படிமத்தை குறிப்பிட்டு பேசினார். அப்போது தமிழ்ச்செல்வன் “வயல்” எனும் உற்பத்திக் களம் எதிர்மறையாக பயனபடுத்தப்பட்டுள்ளதை அவதானித்தார். ஆர்.அபிலாஷ் இக்கவிதையில் தந்தை உருவம் வாழ்வின் அடுத்த கட்ட நகர்வுக்கான கருவியாக சொல்லப் பட்டுள்ளதாக கூறினார்.
அடுத்து நரன் தனது பேரமைதியின் சலனம் என்கிற கவிதையை வாசித்தார். அக்கவிதை அனைவர் இடத்தும் ஒரு ஆழமான அதிர்வை ஏற்படுத்தியது வெளிப்படையாகவே தெரிந்தது. பேரமைதியின் சலனம் முக்கிய பௌத்த உருவகமான தாமரையை பயன்படுத்தி உள்ளதை குறிப்பிட்ட ஆர்.அபிலாஷ் கவிதையில் பிற்பகுதி நிகழ்த்தும் நுட்பமான தாவலை பாராட்டினார். ராஜாஜி நவீன வாழ்வில் சலனங்கள் மற்றும் அமைதி சிக்குண்டு கிடப்பதை இக்கவிதை சுட்டிக் காட்டுவதாக அவதானித்தார். அடுத்து பேசின பிரவீன் இக்கவிதையின் படிம ஆழத்தை பாராட்டியதுடன், தொடர்ந்து இது எல்.ஐ.சி கட்டிடத்தின் மீது நின்று நகர இயக்கத்தை பார்ப்பதான சித்திரத்தை தருவதாக குறிப்பிட்டார். நரனின் கவிதை நூல் எப்போது வெளியாகிறது என்ற கேள்வி பலதரப்புகளில் இருந்தும் எழ அவர் உயிர்மை வெளியீடாக விரைவில் வரப்போகிறது என்றார்.
நரனைத் தொடர்ந்து சா.தேவதாஸின் சார்லஸ் டார்வின்: பரிணாமத்தின் பரிமாணங்கள் என்ற நூல் குறித்த விமர்சனக் கட்டுரை ஒன்றை ராஜாஜி வாசித்தார். டார்வின் பின்நவீனத்துவ தளத்தில் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியதை பிரவீன் விளக்கினார். பேச்சில் அவர் சுஜாதாவை ‘தமிழில் சுவாரஸ்ய அறிவியல் துணுக்குகள் எழுதிய ஒருவர்’ என்று குறிப்பிட ஆர்.அபிலாஷ், செந்தில் பாபு மற்றும் நரன் உள்ளிடோர் அதனை கடுமையாக மறுத்தனர். சுஜாதா கராறான அறிவியல் கண்ணோட்டத்துடன் எழுதினார் என்றார் ஆர்.அபிலாஷ். இதனை மறுத்து பேசிய ஜெய்கணேஷ் சுஜாதாவின் நாவல் ஒன்றில் இருந்து அவர் பெண்களை இழிவுபடுத்தி எழுதினதாக ஒரு வசனத்தை குறிப்பிட்டார். அதற்கு அபிலாஷ் சுஜாதாவின் அறிவியல் கறார்த்தன்மை பற்றின விவாதத்துக்கு புனைவுகள் பொருந்தாது என்றார். செந்தில் பாபு சுஜாதாவின் கடவுள் நூல் முக்கியமான புத்தகம் என்றும், அடுத்த கூட்டத்தில் அது குறித்து விரிவாக பேச விரும்புவதாகவும் தெரிவித்தார். சுஜாதா அவர் இயங்கிய வணிக பத்திரிகை எல்லைக்குள் சிறப்பாகவே இயங்கி உள்ளதாகவும், அவரை தீவிர இலக்கிய தரப்பில் இருந்து பார்ப்பது தோதாகாது என்றும் நரன் தெரிவித்தார். அவரை மறுத்த ரவிச்சந்திரன் சுஜாதா உயிர்மையில் எழுதின கண்ணீரில்லாமல் தொடரில் மேலோட்டமாகவே இயங்கியதாக குற்றம் சாட்டினார். அவர் தீவிரத்தன்மை அற்ற அறிவியல் எழுத்தாளர் என்பதற்கு இதுவே சான்று என்றார் ரவிச்சந்திரன். இதனை ஆமோதித்த பிரவீன் சா.தேவதாஸ் போன்றோரைத் தான் நாம் அசலான் அறிவியல் எழுத்தாளர் என்று ஏற்க முடியும் என்றார். காஞ்சி சங்கராச்சாரியார் விசயத்தில் சுஜாதா எடுத்த ஆதரவு நிலைப்பாடு ஒரு அறிவியல் சிந்தனையாளனுக்கு உகந்ததல்ல என்றால் ராஜாஜி. அபிலாஷ் இதனை மறுத்து அரசியல் நிலைப்பாடு அறிவியல் கண்ணோட்டத்துக்கு புறம்பானதாக இருக்க வேண்டும் என்று சொன்ன கருத்து பரவலான மறுப்புக்கு உள்ளானது. சா.தேவதாஸ் சமூகவியல் பரிமாணக் கோட்பாட்டை சாடி உள்ளது குறித்து அடுத்து விவாதம் திரும்பினது.
இறுதிப் பகுதியாக பிரவீன் தனது பட்டாம்பூச்சி விளைவு என்ற கவிதையை வாசித்தார். இக்கவிதை பரவலான பாராட்டை பெற்றது. ஆர்.அபிலாஷ் அரசியல் கவிதையாக தமிழ்ச்சூழலில் இக்கவிதைக்கு முக்கிய இடம் உண்டு என்றார். கூடவே அறிவியல், உலக அரசியல் நடப்புகள் ஆகியவற்றை அகண்ட கால-வெளி பரப்பில் இக்கவிதை வைத்து பேசுவது பாராட்டத்தக்கது என்றார். “டினோசர் முட்டைகளில் இருந்து மனிதர்கள் வெளிவரும்” என்ற வரி எதைக் குறிக்கிறது என்பது பற்றிய முரண்பாடு மற்றொரு தீவிர விவாதத்தை ஆரம்பித்து வைத்தது. ராஜாஜி இக்கவிதையில் பெயரடைகள் ஆதிக்கம் செலுத்துவதாக கூட்டம் முடிந்த பின்னரும் பிரவீனிடம் விசனித்தபடி இருந்தார். இதற்கு பிரவீன் போக்குவரத்தை கடக்கும் புத்தரது போன்றதொரு புன்னகையை தொடர்ந்து மறுமொழியாக்கினார்.
கூட்டம் நிறைவுக்கு வந்தது. திடீரென்று புல்லாங்குழல் இசை பற்றி பனிமுலை இணையதள அறிவிப்பில் குறிப்பிட்டது நினைவு வந்து “பிரவீன் புல்லாங்குழல் எங்கே?” என்றொரு குரல் கேட்க பிரவீன் தலைமறைவானார். குளிர்ந்த பழரசம் அருந்தி அனைவரும் தத்தம் பாதைகள் நொக்கி பயணமாயினர்.
கூட்டம் ஐந்து நிமிடங்கள் தாமதமாக நடந்ததால் மண்ணுண்ணி கோபித்துக் கொண்டு ஆரம்பத்திலேயே வெளியேறி விட்டதாய் பின்னர் தகவல் வந்தது. எடுத்ததற்கெல்லாம் பின்-நவீனத்துவம் பேசும் மண்ணுண்ணி இப்படி நடப்பு வாழ்வில் கட்டுப்பெட்டியான ஒழுக்கவாதியாக இருப்பதை கண்டுபிடித்த பனிமுலை நிர்வாகக் குழு அவரது நடவடிக்கையை கடுமையாக கண்டித்தது. மண்ணுண்ணியை தண்டிக்கும் விதமாக பெசண்ட் நகர் கடற்கரையில் நடைபெற உள்ள பனிமுலையின் அடுத்த கூட்டத்திற்கு மண்ணுண்ணிக்கு தடை விதிப்பதாக அது முடிவு செய்துள்ளது. உடனே அடுத்த கூட்டத்திற்கு தான் ஐந்து நிமிடங்கள் தாமதமாக வந்து கலகம் செய்யப் போவதாக மண்ணுண்ணி ஒரு அறிவிப்பை செய்ய, அதனை நிர்வாகக் குழு உறுதியாக நிராகரித்து உள்ளது.
கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் பிரபல இணைய பதிவாளர் அதிஷா தனது ஆதரவு மற்றும் வாழ்த்துக்களை நுண்பெசியில் அழைத்து தெரிவித்தார். பனிமுலை என்ற பெயரை வெகுவாக சிலாகித்தார். “ஒரு நாவலுக்கு வைக்க வேண்டிய பெயர் அல்லவா” என்றார். பனிமுலை இணையதளத்தில் தானும் எழுதப் போவதாக அதிஷா உறுதி அளித்தார். அதிஷாவை பனிமுலை ஆசிரியர் குழு வரவேற்கிறது. கூட்டத்தில் வாசிக்கப்பட்ட படைப்புகள் விரைவில் இங்கு பதிவேற்றப்படும்.
- ஆசிரியர் குழு
பனிமுலை
Labels:
பனிமலை கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment