Saturday, April 3, 2010

நித்யானந்தாவிடம் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? - மண்ணுண்ணி



குடுமி போட்ட ஐயங்காரர் மாமா வாயில் இருந்து காலை வேளையில் அதுவும் ஒரு பக்தி நிகழ்ச்சியில் நித்யானந்தாவுக்கான விளக்கம் வரும் என்று நான் எதிர்பார்க்க இல்லை. மேலும் விளக்குவதற்கு முன் சத்தியபிரமாணம் ஒன்று:
நான் விசுவாசியோ அவிசுவாசியோ அல்ல. நித்யானந்தாவின் நடைமுறை ஞானம் மற்றும் லௌகீக சாமர்த்தியத்தின் மீது அபார மரியாதை கொண்டவன்.



விஜய் டீவியில் சுமார் ஏழு மணிக்கு, எச்சில் சாப்பாடு கேட்டு ஜன்னல் திண்டில் காக்கா கரையும் வேளையில், குடுமி மாமா சொன்னது என்னவென்றால்: “ஒருவருக்கு நல்ல குரு அமையாமல் போவது ஒரு நல்ல மனைவி அல்லது நல்ல மகன் அல்லது நல்ல மருகள் அமையாமல் போவது போல். இதற்கெல்லாம் காரணம் முன் ஜென்ம பாவம். நல்ல குரு அமைவதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்”.

நான் எவ்வளவு பெரிய பாவி என்பதை உடனே உணர முடிந்தது. ஜெயா டீவியில் ஒரு குடுமி பஜார் சுருதி டான்ஸ் (அதாவது பாட்டின் சுருதி)ஆட பஜனை செய்து கொண்டிருந்தது. குருக்கள் அசுரன் வாமனனை விஷ்ணு பாதாளத்துக்கு அனுப்பின கதையை விளக்கி கொண்டிருந்தார். வாமனனின் கதிக்கு காரணம் அவர் விஷ்ணுவின் கால்களின் சரியான சைஸ் என்ன என்று கவனிக்காததே என்றார் பஜனைத் தலைவர். அதுவும் விஷ்ணு இந்த அளவைப் பற்றி பன்னிப் பன்னி வெவ்வேறு ஸ்தாய்களில் பாடி பாடி சொல்லியிருக்கிறார். ஆனால் பாவம் செய்த வாமனன் நம்ம வகை.attention deficit disorder. பஜனை குழுவில் ஒரு சிறுவன் ஸ்பஷ்டமாக கொட்டாவி விடும் வேளையில் நான் அங்கிருந்து ராஜ் டீவிக்கு வந்தேன். பால் தினகரன் நம்மைப் பிடித்த சாத்தானும், இலவச இணைப்பான பாவங்களும் இப்போதே துரத்தப்படும் என்றார். காலை வேளையில் முன்னணி தொலைக்காட்சிகள் பக்தி மார்க்கம் செல்வதற்கு மக்களின் ஒரு சின்ன செண்டிமண்ட் தான் காரணம் என்று நினைத்திருந்தேன். அதாவது கடவுள் நாமம் நினைத்து, சொல்லி அல்லது கேட்டு ஆரம்பித்தால் அனறைய நாள் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை. ஆனால் நடப்பதோ வேறு. பாவி பாவி என்று நினைவுறுத்தப்பட்டு குற்றவுணர்வுடன் நமது மக்களின் காலை வேளை ஆரம்பிக்கிறது.



இதற்கு Ftv-ஏ தேவலாம் போல. Ftv Breakfast-இல் சிகையலங்கராம், முக ஒப்பனை, இமை வரைதல் என வெவ்வேறு உதவியாளர் கரங்கள் தன் மீது ஈடுபட்டிருக்க பிளாக்பெரி நுண்பேசியில் விரல்களால் உலாவியபடி கன்ன எலும்புகள் துருத்தின ஒரு மாடல் சொல்கிறாள்: “இந்த மழைப்பருவ ஷோவுக்காக மூன்று மாதங்களாய் கடுமையாக தயாரித்துக் கொண்டு வருகிறேன்”. இத்தனை வேலைகளுக்கு இடையே பாவமூட்டைகள், பார்ப்பானின் காலடி அளப்பது, குற்றவுணர்வுக்கு எல்லாம் எங்கே நேரம் சொல்லுங்கள்.

No comments:

Post a Comment