Friday, April 9, 2010

திமுக ஆட்சி யாரை ஊக்குவிக்கிறது? (அ) ரவுடிகள், (ஆ) போலீஸ் - மண்ணுண்ணி






ஜெயலலிதாவுக்கு தி.மு.கவை பிடிக்காததற்கான மிக சின்ன காரணங்களில் ஒன்று மு.க ஆட்சியில் ரவுடிகள் கட்டவிழ்த்து விடப்பட்டு ”சட்டம்-ஒழுங்கு சீர் குலைவது. அவர் தூங்கி பெட்காபி குடித்தபடி எழுந்துததுமே “கருணாநிதியின் மைனாரிட்டி குடும்ப ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ...” என்று கூறி தொடங்குவதாக நம்பகமான இடங்களிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஆனால் சட்டம் ஒழுங்கை கராறாக கையில் எடுத்தால் புல்லட்புரூப் அம்மாவை பாசிஸ்டு என்கிறார்கள்। வரும் உலகத்தமிழ் மாநாட்டில் வெளியிடப் போகும் கலைஞர் அகராதியில் பாசிஸம் என்ற வார்த்தையை அரசியல் பிரிவில் சேர்க்கப்படும் அளவிற்கு ஜெவை குறிப்பிடும் போதெல்லாம் அந்த வார்த்தை பரவலாக பயன்படுத்தப்பட்டு விட்டது। வேலை செய்வதே பிடிக்காத என் நண்பன் ஒருவன் இந்த இரு தீவிர நிலைப்பாடுகளுக்கு ஒரு மாற்று சொல்கிறான். அவனுக்கு மறந்து விட்ட ஒரு குறளில் திருவள்ளுவர் கூறியுள்ள படி ஒரு ஆட்சியாளன் இரண்டு எதிரிடைகளுக்கும் நடுவே ஒரு கோடுகிழித்து அதில் பயணிக்க வேண்டுமாம். அது சாத்தியமே இல்லை என்று நான் சொன்னதற்கு அவன் அவனது பெண் மேலாளர் சொன்ன ஒரு கதையை சொன்னான்.
இந்த மேலாளர் ஜெவை போல ஒரு அம்மையார்। அதாவது அடுத்தவர்கள் எப்போதும் முதுகு வளைந்தபடியே நடக்க வேண்டும் என்று விரும்புபவர்। கதை அவர் ஐம்பதுகளில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளி தலைமை ஆசிரியரால் சட்டம் ஒழுங்கு எப்படி பேணப்பட்டது என்பதைப் பற்றியது. அதில் குறிப்பிடத்தக்கது நோட் புத்தகங்களுக்கு பழுப்பு வண்ண அட்டை அணிவிக்காத மாணவர்களுக்கு தலைமையாசிரியர் தரும் தண்டனை. சட்டையை கழற்றி வாசலில் முட்டி போட்டு நிற்க வைப்பாராம். (அது பெண்களுக்கு மட்டுமேயான பள்ளியா என்ற ஐயம் உங்களைப் போன்று எனக்கும் எழுந்தது). ஆனால் தண்டனைக்காலம் முடிந்ததும் ஆசிரியர்கள் ஓடி வந்து குற்றவாளியை அள்ளி எடுத்து “செல்லம், புஜ்ஜு, ஜூஜூ” என்றெல்லாம் கொஞ்சி உடலின் பலபாகங்களை கிள்ளி சீராட்டுவார்களாம். இதன் விளைவு? உங்களுக்கு தண்டனை மீது கோபமே வராதாம்!

ஜெ சொல்வதில் அவரது கட்சிக்காரர்களுக்கே நம்பிக்கை இல்லை போல। அவர்கள் முழுக்க மாறுபடுகிறார்கள். சட்டசபையில் சமீபத்தில் நடந்த விவாதத்தில் கலையரசன் தி.மு.க ஆட்சியில் போலிசாரிடையே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கூறியுள்ளார். குறிப்பாக நடைபாதை கடைக்காரர்களிடம் கூட லஞ்சம் வாங்குவதாக அவர் கூறியுள்ளதை முக்கியமாக கருதுகிறேன். அடிக்கடி போலி டி.வி.டி தயாரித்து, விற்பனை செய்ததாக சிலரை கைது செய்து பத்திரிகைகளில் படம் வெளியிடுவார்கள். ஆனாலும் பட்டப்பகலில் திருட்டு டி.வி.டிக்கள் வெளிப்படையாக விற்கப்படுகின்றன. இவை வெறுமனே மாமூல் கைதுகள் தாம். கிண்டி பகுதியில் ஒரு தொப்பை போலீஸ் மாமா பைக்கில் இருந்தபடியே திருட்டு டி.வி.டிக்காரரிடம் லஞ்சம் கேட்டுப் பெற்று சட்டைப் பையில் சொருகுவதை கண்டேன். எனக்கு கரப்பான்பூச்சியையும் போலீசையும் கண்டால் சின்ன வயசில் இருந்தே பயம் என்பதால் இந்த காட்சியை உங்களுக்காக நுண்பேசியில் படம் பிடிக்கும் முயற்சியை கைவிட்டேன். இங்கு ஒன்றை ctrl+U போட்டு சொல்ல வேண்டும். மாமூல் கொடுக்கும் கடைக்காரர் போலீசை சிறிதும் சட்டை செய்யவில்லை. நாய்க்கு புரை வாங்கிப் போடும் ஒருவித அலட்சிய பாவனை. அடுத்து இந்த கடைக்காரரிடம் விசாரித்ததற்கு படிநிலை பொறுத்து லஞ்ச தொகை மாறுபடும் என்றார். அதாவது நூறில் இருந்து ரெண்டாயிரம் ரூபாய் வரை அடிக்கடி வாங்கி செல்வார்களாம். காவல்துறை இதற்கெல்லாம் ஒரு நிலையான கணக்கு வைத்துக் கொண்டு கடை, இடை, தலை ஊழியர்களை எல்லாம் கண்டமேனிக்கு தோன்றும் போதெல்லாம் அனுப்பி கை நீட்டும் அவலத்தை தவிர்க்கும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் விரும்பினார். அடுத்து தர்பூசணி மற்றும் இளநீர் விற்கும் மற்றொரு சாலையோர கடைக்காரர் தி.மு.க ஆட்சி பற்றி இதே போன்றே அலுத்துக் கொண்டார். “அ.தி.முக ஆட்சியில் போலீஸ்கரங்க லஞ்சம் வாங்கவே பயப்படுவாங்க. இப்போது வெளிப்படையாவே வந்து புடுங்கீட்டு போறாங்க.” மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் போலீசுக்கு தாரை வார்க்க வேண்டி உள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார். “மாமூல் கொடுக்காட்டா கேஸ் போடுவாங்க. இவனுவளுக்கு கொடுக்கிற லஞ்சக் காசை கோர்டில பைனாவே கட்டீரலமுன்னு சில சமயங்களில் தோணும்”.
”காவலர்களை யார் காவல் காப்பது?”
சாகரடீஸ் தனது லட்சிய நாடான utopia-வை விளக்கிக் கொண்டிருக்கும் போது அவரிடம் இந்த கேள்வி கேட்கப்படுகிறது। பின்னர் இதற்கு தீர்வு சொல்லும் சீடர் பிளேட்டோ “அதிகார மோகம் இல்லாதவர்கள் காவலர்களாக வேண்டும்” என்கிறார்। இது சாத்தியமில்லை என்று உணர்ந்து விட்ட பின் இன்று மற்றொரு தீர்வு சொல்லப்படுகிறது: அதிகாரத்தை பிரித்தளிப்பது। எந்த பெரிய குழுவிடமும் அதிகாரம் மொத்தமாக சேர்ந்து விடுவதை தவிர்ப்பது। ஆட்சி அதிகாரம் இப்படி பகிர்ந்தளிக்கப்படுவது ஊழல் மற்றும் பொறுப்பின்மையை குறைக்க உதவலாம்.
எனக்கென்னமோ ஜராசந்தன் கதை தான் நினைவுக்கு வருகிறது.

1 comment: