Wednesday, March 31, 2010

தமிழ்நதிக்கு என் பதில் - ஆர்.அபிலாஷ்



எனது சு.ராவின் கவிதைப் பதிவில் கவிஞர் தமிழ்நதி இப்படி ஒரு பின்னூட்டம் இட்டிருந்தார்.


ஜெயமோகன் குறைந்தபட்சம் சு.ரா.வையாவது கவிஞர் என்று ஒத்துக்கொள்கிறாரா? அண்மைய கவிஞர்களில் முகுந்த் நாகராஜனைத் தவிர்த்து (தமிழில்) வேறெவரையும் கவிஞர் என்று அவர் கருதவில்லை என்று அறிந்தேன். நல்ல சில கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றனவாம். ஆனால், நல்ல கவிஞர்கள் இல்லையாம்:)

தமிழ் சுட்டிக் காட்டியுள்ள இந்த விமர்சன அராஜகம் கண்டிக்கத்தக்கது என்பதால் ஒரு தனிப்பதிவாகவே என் பதிலை தருகிறேன்.

அன்புள்ள தமிழ்நதி
ஜெ.மோவின் அக்கட்டுரையை நானும் படித்தேன். அசட்டுக் கருத்துக்கள். இன்றைய உலகக் கவிதை வெறும் நுண்சித்தரிப்புகளால் ஆனது மட்டுமே என்கிறார். யாருமே உருவக, படிம கவிதைகள் எழுதுவது இல்லை என்கிறார். ஆனால் உண்மை வேறு. சமீபமாக வெளியான 2008 Best American Poetry (ராபர்ட் பிளை தொகுத்தது) போன்ற நவீன கவிதை தொகுப்புகளை அமெரிக்க நூலகத்தில் படித்தேன். இன்றைய சமகால கவிஞர்கள் படிம, உருவக வடிவங்களை இன்னும் விட இல்லை. அதனோடு பழமொழிகளில் இருந்து கதை வடிவங்கள் வரை எண்ணிறாத புதுமைகளை முயன்ற படி இருக்கிறார்கள். சொல்லப்போனால் எளிய ஒழுக்க விழுமியங்களை தவிர்த்து விடும் சற்றே கலாச்சார கலகக்காரர்களாக பல கவிதைக் குரல்கள் தம்மை காட்டிக் கொள்கின்றன. இவை ஜெ.மோவுக்கு தோதானதாக் நிச்சயம் இருக்காது. உதாரணமாக ஒரு பெண்குறியின் மலைப்பிரசங்கம் என்ற கவிதையை சொல்ல வேண்டும். ஜெ.மோ பக்திக் காலகட்டத்தின் நெகிழ்ச்சியில் இருந்து வெளிவர விரும்பவில்லை. பெரும்பாலும் தனது எளிய கற்பனைகளை தன்னம்பிக்கையுடன் உரக்க சொல்லி நிறுவி விட முயல்கிறார். அவரது காக்கி நிக்கர் அணிவகுப்பு படையினர் முன் மட்டுமே இது எடுபடும். சுருக்கமாக சொல்வதானால், அவரது இப்படியான பிரசங்கங்களை படிக்கும் போது ஜுராஸிக் பார்க் நினைவு வருகிறது.
நன்றி.

Monday, March 29, 2010

என்கவுண்டர் இப்போ இல்லீங்க




என்கவுண்டர் செய்யப்படும் தொழில்முறை கொலைகாரர்களுக்கு அது ஏற்கனவே தெரிய வருவதால் ஒரு மரண தண்டனை கைதியின் மனநிலை அவர்களுக்கு ஏற்படும். சாவை விட அதை எதிர்பார்த்து அச்சத்தில் வாழ்வது இரங்கத்தக்கது. ரெண்டு நாட்களுக்கு முன்னர் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ள நடராஜனின் பிணத்தை வாங்க பெற்றோர் ஆரம்பத்தில் மறுத்திருக்கிறார்கள். என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தை மட்டும் பார்வையிட்டு விட்டு ஊர் திரும்பியிருக்கிறார்கள். ஒருவழியாய் சமாதானமாகி நடஜாஜனின் அப்பா பிணத்தை பெற்று சென்றிருக்கிறார். ஒரு குறைந்த பட்ச எதிர்ப்புணர்வாக மட்டுமே இதை பார்க்க முடிகிறது. ஒரு சமூக விரோதிக்கு நீதி விசாரணைக்கு பின்னான மரியாதையான சாவு அவசியமா என்று நீங்கள் கேட்கலாம். பதிலுக்கு இப்படியும் கேட்கலாம்: வெறி நாயை ஏன் கட்டையால் தாக்கி கொல்லக் கூடாது? விவசாய நிலங்களை அழிக்கும் யானைகளை மின்சார வேலி அமைத்து ஏன் சாவடிக்க கூடாது?



இப்படி மிருகங்களோடு நடராஜனை ஒப்பிட்டதற்கு காரணம் உண்டு. மும்பையில் திட்டமிட்டு சிறுகுழந்தைகள் உள்ளிட்ட மனிதர்களை நெற்றிப் பொட்டில் சுட்டுக் கொன்ற கஸாப் போன்றோரை என்கவுண்டர் செய்தோமா? கோடிக்கணக்கில் செலவு செய்து அவன் வழக்கை இன்று வரை நடத்தவில்லை? தமிழகம் முழுவதும் காலாவதி மருந்துகளை விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்த சஞ்சய் குமார், மீனாட்சி சுந்தரம் போன்றோர் எத்தனை மனித உயிர்களுக்கு உலை வைத்திருப்பார்கள் என்பது இன்னமும் தெரியாது; தெரியவும் வராது. நிச்சயம் நடராஜன் போன்ற எளிய கொலைஞர்களை விட பலமடங்கு அதிகமே. இந்த போலி மருந்து வியாபாரிகள் என்கவுண்டர் செய்யப்படுவார்களா? தாவூதின் பினாமிகள் மும்பையில் ரியல் எஸ்டேட் வெற்றிகரமாக வியாபாரம் செய்து வளமாக உள்ளார்கள். அவர்கள் அரசுக்கு சொந்தமான கட்டிடத்தையே காலி செய்து விற்ற தமாஷும் நடந்தது. தாவூத்தை நமது போலீஸ் இந்தியாவுக்கு நாடுகடத்தி அனுப்ப வேண்டும் என்று அவ்வப்போது கோரிக்கைகள் வைக்கிறார்கள். அப்படி தாவூதாக விரும்பி இந்தியா வந்தாலும் அவருக்காக வாதிட இந்தியாவின் ஆகச்சிறந்த வக்கீல்கள் வரிசையில் நிற்பார்கள். நமது சமூகத்தின் மின்வேலி உயர்மட்ட குற்றவாளிகளை தாக்காது.

தொழில்முறை கொலைஞர்களின் தேவை மன்னர் காலங்களில் இருந்தே உலகம் முழுக்க இருந்து வந்துள்ளது. அலெக்சாண்டரின் தந்தை பிலிப் ஒரு தொழில்முறை கொலைகாரரால் கொல்லப்பட்டது நாம் அறிந்ததே. ரோம சாம்ராஜ்யத்தின் பெரும்பாலான மன்னர்கள் இப்படியான ஒப்பந்த கொலைகளுக்கு பலியானவர்கள் தாம். இங்கிலாந்தின் மூன்றாம் மற்றும் நான்காம் ஹென்ரி மன்னர்களுக்கும் இதுவே நேர்ந்தது. அரசியல், புரட்சி, தொழில் என்று ஒப்பந்த கொலைஞர்கள் மூன்று வகைமைகளை சேந்தவர்கள். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவில் இத்தகையவர்கள் பிரத்யேக நிறுவனங்களால் தேர்ச்சி அளிக்கப்பட்டு நிழல் உலகங்களுக்கு அவுட்சோர்ஸ் செய்யப்படுகிறார்கள். ரஷ்யாவில் இவர்களின் பெயரே சுவாரஸ்யமானது. க்ளீனர். போலீசார் அத்துமீறும் வன்முறைத் தொழிலாளர்களை திட்டமிட்டு தீர்த்துக்கட்டுவது கொசு-அடி சாதனை மட்டும் தான். ஆயிரக்கணக்கான வருடங்களின் வரலாற்று நீட்சியுள்ள இந்த குட்டைகளில் இருக்கும் வரையில் என்கவுண்டர்கள் அசட்டு தீர்வுகள் மட்டும்தான். இத்தகைய அதிகாரங்களை போலீசுக்கு அளிப்பதும், இதற்காக அவர்களை கொண்டாடுவதும் நம் சமூகம் மன சமநிலை இழந்துள்ளதை சொல்கிறது.

சமீபமாக என்கவுண்டர் செய்யப்பட்ட மற்றொரு ரவுடியின் என்கவுண்டர் செய்தி ஒரு நிருபருக்கு கசிந்து நேரம் இடம் போன்ற தகவல்கள் நான் வேலை பார்த்த பத்திரிகை ஒன்றுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. செய்தி எழுதி, அச்சுக்கு தயாராக்கப்பட்ட நிலையில் மற்றொரு தொலைபேசி அழைப்பு. ”செய்தியை போட்டு விடாதீர்கள். என்கவுண்டர் இன்னும் நடக்க இல்லை. இடமும் காலமும் மாற்றப்பட்டு விட்டது.” இன்னும் கொஞ்ச நாட்களில் சன் டீவியில் இத்தகைய என்கவுண்டர்கள் நேரலையாக காண்பிக்கப்படலாம். அப்போதும் நாம் அதிர்ச்சியடைய மாட்டோம். மனக்கிளர்ச்சி அடைவோமே தவிர அறவுணர்வுகள் தூண்டப்படாது. தொடர்ந்து லத்திகா சரண் தோன்றி “அத்தனையும் கிராபிக்ஸ்” என்பார். சில காட்சிகள் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படி பழகி விட்டோம்.

Sunday, March 28, 2010

அழகிரிக்கு நோபல் பரிசு பரிந்துரை: மண்ணுண்ணி



அதாவது நமது தலைவருக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கலாம் என்று சொல்ல வருகிறேன். அதற்கான காரணங்கள் மிகக் கச்சிதமாக அவரது சமீபத்திய ஜூ.வி பேட்டியில் காணக் கிடைக்கின்றன. பேட்டியின் முக்கிய அம்சங்கள் மட்டும் சுருக்கமாக.

தயாநிதி மாறன் முன்னர் மத்திய தொலைதொடர்பு அமைச்சராக இருந்த போதும் இப்போது ஜவுளி அமைச்சராகவும் தினமும் சன்.டீ.வியில் தோன்றி சாதனைகள் செய்த போது அழகிரி ஏன் மந்தமாக உள்ளார் என்ற சந்தேகம் நமக்கெல்லாம் இயல்பாகவே ஏற்பட்டது. அப்புறம் தேர்தலில் அவர் விடுத்த உன்னை மூன்று லட்சத்து மூன்னூற்று மூன்றரை ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என்பது போன்ற சூளுரைகள் ஏன் தன் அமைச்சக வேலை பற்றி சொல்வது இல்லை என்று கூட ஒரு துணுக்கு நமக்கெல்லாம் ஏற்பட்டது. ஐயா சொன்னதை செய்பவர் என்பதால் ஒவ்வொரு முறையும் செய்து காட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது. சற்றே நினைவுகளை கிளறினால் அவர் வட நாட்டு ரயில்வே நிலையத்தில் மாட்டித் தவித்த தமிழர்களை காப்பாற்றியது நினைவில் வருகிறது. என்ன, ஆபத்து சமயத்தில் அமைச்சரையே இம்மாதிரி விசயத்தில் அணுகும் வசதி படைத்த அவர்கள் உயர்தட்டினர் தாம். அழகிரி குறுக்கிட்டிரா விட்டால் அடுத்த நாள் விமானத்தில் ஊர் திரும்பி இருப்பார்கள் என்று சில குசும்பர்கள் சொன்னதை யார் கேட்டார்கள். அடுத்து, மதுரையில் கால்செண்டர் நிறுவனங்கள் நடத்துவதற்கு ஊக்குவிப்பதாகவும் அதற்கு தன் சொந்த கட்டிடங்களையே பயன்படுத்தலாம் என்று ஒருமுறை அறிவித்தார். ஒரே அடியில் நற்பெயர், வாடகை மற்றும் மாங்காய் என்று மீண்டும் அதே அன்னிய சக்திகள் முணுமுணுத்ததை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் இதுவரை சொன்னதெல்லாம் தலைவரின் தற்போதைய சாதனையோடு ஒப்பிடிட்டால் இதோ பிய்த்தெடுக்கிறேனே இதற்கு சமம் (மன்னிக்கவும் கோபம் வந்தால் உடனே வன்முறையில் ஈடுபட வேண்டியதாகிறது. பாதகங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்). நோபல் தகுதியுள்ள விசயம் அது.



”உர விவாதங்களின் போது நீங்கள் மாயமாகி விடுவதாக எதிர்க்கட்சிகள் புகார் சொல்லுகின்றனவே” என்று ஜூ.வி நிருபர் கேட்கிறார். “எதிர்க்கட்சிகளை” கவனியுங்கள். தமிழகத்தில் இப்படி அவசியமின்றி கேள்வி கேட்கிற தொல்லையை வேறு யார் செய்கிறார்கள். அதற்கு தலைவர் பதிலுக்கு தனது சாதனைப் பட்டியலை தருகிறார்.
• ”இதுவரை எந்த அமைச்சரும்” (இந்த ’இதுவரை உலக வரலாற்றில் முதன்முதலாக’ என்று சொல்வது ஒரு தமிழ்க்கலாச்சார அடையாளம்) செய்திராத உரமானியத்தை விவசாயிகளிடமே நேரடியாக கொண்டு சேர்க்கும் திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பித்திருக்கிறேன்.

• இந்தியா முழுவதும் நலிந்து கிடக்கும் எண்ணற்ற உரத் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.

• ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க மருந்து கம்பனிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறேன்.

• இவ்வளவு செய்த பிறகு நான் மாயமானேன் என்றால் நியாயமா?



இஸ்லாமிய நாடுகளில் இருந்து படைகளை பின்வாங்கப் போவதாய் சொன்னதுமே ஒபாமாவுக்கு சமாதான நோபல் வழங்கப்பட்டது. நம் தலைவரும் மேற்சொன்ன சாதனைகளை இன்னும் செய்து முடிக்கவில்லை என்றே ஒன்றே போதுமே அவருக்கும் சின்னதாய் ஒரு நோபல் வழங்கப்பட. தமிழன் எத்தனை நாள் தான் இதற்கெல்லாம் ஏங்கி தனக்குத் தானே பட்டங்கள் வழங்கிக் கொண்டிருப்பது?



ஒரு தந்தையாகவும் தலைவரின் சாதனைகள் யாருக்கும் சளைத்தது இல்லை. தமிழ்ப்படம் என்ற துணிச்சலான படத்தை தயாரித்து மொத்த கோடம்பாக்கத்தையும் கலவரப்படுத்தியதற்காக துரைதயாநிதிக்கு தீவிர இலக்கிய கர்த்தாக்கள் விரைவில் விழா எடுக்கப் போவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.



நமீதாவின் டேட் கூட கிடைத்து விட்டது. அவர் மேடையில் துள்ளி நடனமாடிய படியே ஒரு கையால் புத்தகங்கள் வெளியிடுவார்; மறுகையால் கிழித்தெறிவார். இப்படிப்பட்ட துரைஅழகிரிக்கு தொகுதி விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்திருக்கிறார் தலைவர். இதன் மூலம் ஜெ எட்டு தலைமுறைக்கு மீண்டு வர முடியாமல் செய்வோம் என்று அச்சுக்கு வராத சேதி ஒன்றில் சூளுரைத்திருக்கிறார் தலைவர். குடும்பக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவது தமிழ்த்தலைவர்களுக்கு தனிச்சிறப்பு அல்லவா! அமெரிக்கர்களுக்கு இதன் மதிப்பு புரியாவிட்டாலும் நோபல் எம் கைப்பிடிக்கு வெகு அருகில் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Saturday, March 27, 2010

கவிதைகள் - பிரவீன்


1..

இன்று நம் வீதியில்
மாலையின் நடனம் புதிரானது.
கலவையான உணர்ச்சிளால் யாக்கப்பெற்ற அதன் ஒப்பனைகள் முன்
நம் பாதைகள் தடுமாறுகின்றன.
பருவத்தின் மணற்கடிகைக்குள் மாறி மாறி சலித்த சொற்கள்
இந்த கூசும் ஒளியில் வெறும் மணலாய் உறுத்துகின்றன.
உன் வாசலில் உதிரும்
மரமல்லிகளை அள்ளிச் செல்ல
இந்த மாலையில் பித்தம் கொண்டிருக்கிறது காற்று.
பறவைகள் சென்றுவிட்டதும்
மங்கிய இலைகளில் பூத்த செவ்வரளிகள் முன்
அந்தியின் இமைகள் மெல்லக் கூம்புவதும்
எனக்குப் புரிகின்றன.
ஒரு பருவம் முடிவுக்கு வருகிறது,
எனில் ஒவ்வொரு பருவத்தின் விடைபெறலும்
இத்தனை நாடகத்தோடுதானா.
இரவின் புராதன ரேகைகள்
இந்த வீடுகளின் மேல் படிகையில்
மௌனத்தின் நட்ச்த்திரங்கள் பற்றிக்கொள்கின்றன.
அறுபட்ட இககணத்தில்
எனது ஆழங்களுக்குள் நான் பாய்கையில்
சுக்கு நூறாகச் சிதறுகிறது என் பிரபஞ்சம்..

..........

2..

சடைத்துக் களைத்த மழை
சாம்பல் மதியத்தின் மீது
இச்சையின் கண்ணீர் துளிகளை விசிறுகிறது.
நீர்ப்பரப்பின் மறைவும் வெங்காயத் தாமரைகளின் முகாந்திரமற்றப் படர்வுமான
புறநகர ஏரியின் பின்னணியில் அவள் வீடு திரும்புகிறாள்
ஈரம் கணக்கும் ஆடைகளோடும்
இளம் முருங்கைப் பிசினாய்ப் பிசிபிசுத்த காலத்தோடும்.
தனிமை வீடும்
அதன் ஒரே சொல்லாய் நீண்ட தனிச்செம்பருத்தியும்
இரகசியமாய் கவனிக்கின்றன
தொலைவில் மறுகரைமெலே மௌனமாகக் கடக்கிறது
பறக்கும் புறநகர ரயில்.
எப்போதைக்குமான நகர் நீங்கலென
அது அடிவான வெறுமைக்குள் ஊடுருவுகிறது.
எட்டாவது முறையாக
அவள் கைப்பேசியில் துடிக்கும் அந்த எண், அவள் உறுதி...
எதையும் சொல்லாத இந்த மதியத்தின்மேல் படிகிறது
காலத்தின் சாம்பல்.
சலனமுறும் காற்றில் தென்னைகள் சலிப்படைகின்றன.
வெளிறும் இச்சிறுபொழுதில் மாறும் பெரும்பருவங்களை அவை அறிந்துள்ளன.
துலக்குமுறும் வானின் கீழ்
கடலடியில் புரளும் ஒரு சிப்பியென
அவள் நகர்கிறாள்.

ஹைக்கூ - தேவராஜன்


1.
இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.
கண்ணில் படவில்லை
ஊர்ந்து கடக்கும் சரக்கு ரயிலின்
கடைசி பெட்டி.

2.
செங்குத்தாய் பெய்யும் மழையின்
கோணம் மாறுகிறது
ஜன்னலோர இருக்கை
வேகமெடுக்கும் ரயில்.

3.
சுழன்று கொண்டே இருந்தாலும்
விடுவதாய் இல்லை
மின்விசிறியை தூசுகள்.

ஹைக்கூ -

கவிதைகள் - பிரவீண்

*1

இந்த பனி இரவில் அவன் ஏற்றிருக்கும் பாத்திரம்
தானியங்கி பணம் வழங்கும் எந்திரத்தின் பாதுகாப்பாளன்.
நூறு பயணங்களுக்குப் பிறகு வாழ்வின் ஒரு புள்ளியில்
அவன் வந்து நிற்கும் இடம்.
நீண்டிருக்கும் இந்த இரவு அவன் மன நிழல்தான்.
இரவைப் போலவே
அவன் மனவெளியெங்கும் படிந்துளது ஊமைப் பனி.
நடுத்தர வயதுப் பருமனில் சீருடையின் அன்ன்ியத்தொடு
ராணுவ மிடுக்கில் நிற்பது
காலம் அவனுக்குப் பரிசளித்த அங்கதம்.
குளிரூட்டிய கண்ணாடி அறையின் பகட்டான ஒளியில்
ஏடிஎம் எந்திரம் வாழ்ந்து வரும்
சீறலற்ற தட்டையான வாழ்க்கையின்மேல்
அவனது சாயல் படிந்திருப்பதை மறுப்பதற்கில்லை.
இரவுக்குள் ஒரு வெள்ளை நிறக் கார் வந்திறங்க
காதலர் போன்ற இருவர் வெளிப்படுகின்றனர்.
அவளின் பளிச்சிடும் ஒப்பனையும் பர்ஃப்யூம் மணமும்...
தொலைந்த பருவத்தின் நீரோடை துளிர்க்க
ஒரு கவித்துவ கணத்துக்குள் அவன் தடுமாறுகிறான்.
மீளுகையில் அவனுக்குள் எஞ்சுவது
ஒரு எளிய வர்க்க சீறல் மட்டுமே.
அவர்கள் சென்றுவிட்ட வெற்றிடத்தில்
இரவு மேலும் அட்ர்த்தி கொள்கிறது.
ஏடிஎம் எந்திரத்தை கண்கள் சந்தித்தபோது
மேலும் அது அவனை உறுத்து நோக்கத் தொடங்கியது.
- - - - - - -
*2
எதுவித கருத்துமற்று பெய்துகொண்டிருக்கிறது
நேர்த்தியாக சம்பிரதாய மழை.
மிகுந்த ஒழுங்கமைவுடன் அறைச் சுவரில் நீண்ட பாதைகளை வரைகின்றன
பருவகால எறும்புகள்.
அனைந்த நிலையில் தொலைக்காட்சியின் பிம்பங்களற்ற திரைக்குள்
யுத்தங்கள் துயில் கொள்ளும் இக்கணத்தில்
காலம் ஒரு புகைப்படம் போல் தொங்குகிறது.
எதிரே உன் வாசலில் நின்றபடி சூழலின் போதமற்றுப் பேசிக்கொண்டிருக்கிறாய்
கைப்பேசியில் வெகு நேரமாய்.
மறுமுனை பற்றிய என் கற்பனைகள்.
உன் அந்தரங்கம் ஊடுருவி நான் விழையும் கிளர்ச்சி, தன்னிரக்கம்.
ஈர மரங்களில் கிளரும் மரபான வாசம்
உனக்கு என் ரகசிய பரிசு.
இன்றைக்கான தானியங்களை சேகரிக்க
இன்னும் நான் தயாரகவில்லை.
காற்றிலும் காலத்திலும் இன்று சலனங்கள் இல்லை,
எதுவித கருத்துமற்று
நமக்கிடையில் பெய்துகொண்டிருக்கிறது
மிகவும் அலுவல்பூர்வமான சம்பிரதாய மழை.
உரையாடலுக்கு லாயக்கற்ற மழை.

சு.ராவின் காற்று: வெளியேறலின் தவிப்பு -ஆர்.அபிலாஷ்.




காற்று கதவை தட்டும்
முட்டும்
தாழிட்டதில்லை.

ஒருக்களித்த கதவுகள் மீது
ஆங்காரம் கொள்ளும்
திற அல்லது மூடு
எனக் கத்தும்.

எனினும் தூசு போர்த்தும்
நெடுகிலும் பரப்பும்.

எனது பெயர்
உக்கிரப்பெருவழுதி
எனக் கூறிச் செல்லும்.

சருகு உதிர்க்கும்
எனினும் தளிர் ஒடிக்கும்.

மூட ஜென்மம்.

எனினும் குருவிகளை முத்தமிடும்
அதிர்ஷ்டம் கொண்டது.

இருபதாம் நூற்றாண்டு எழுத்தில் மனிதன் எதிலாவது சிக்குண்டு வெளியேற முடியாமல் தவிக்கிறான்: சமூக, அரசியல், தத்துவார்த்த தளங்களில் இந்த வெளிவருதலுக்கான தவிப்பு சு.ராவின் கவிதைகளிலும் காணலாம். அவரது ”ஜன்னல்” சிறுகதை நினைவிருக்கலாம். இந்த சிறைபட்ட மனிதன் உள்ளே இருக்க காற்று வெளியே உலாவுகிறது. இக்கவிதை ஷெல்லியின் Ode to Westwind-ஐ நினைவுபடுத்துகிறது. அந்த ரொமாண்டிக் கவிதையில் காற்று எனும் மகாசக்தி அழிவுக்கும் பிறப்புக்கும் ஆதாரமாக காட்டப்படும். சு.ரா இங்கு மேலும் யதார்த்தமாக பேசுகிறார். சு.ராவின் நவீன காற்றால் ஆங்காரம் கொள்ள, ஜன்னலை முட்டி திற என்று கத்த மட்டுமே முடியும். எங்கும் தூசு பரத்தி தன் ’அடையாளம்’ நிறுவுகிறது. “உக்கிரப்பெருவழுதி” என்பது பெயரில் மட்டுமே.

“சருகு” உதிர்க்கும் என்பதிலுள்ள மெல்லிய கேலியை கவனியுங்கள். “தளிர்” ஒடிக்கும் எனும் போது கவிதை மெல்ல தடம் மாறுகிறது. ஒரு சமூக\அரசியல் அரசியல் தளம் உருவாகி வருகிறது. ஜெயமோகன் சொல்வது போல் சு.ரா வார்த்தைகளை சுண்டி சுண்டி தொனி மாற்றுவதில் நிபுணர். கவிதையை இங்கேயே கூட முடித்திருக்கலாம். “குருவிகளை முத்தமிடும் அதிர்ஷ்டம் கொண்டது” கூட அழகான வரிதான். இங்கு ஒன்றை குறிப்பிட வேண்டும். “அதிர்ஷ்டம்” எனும் சொல் இவ்வரியை ஒரு அறிக்கை கூற்றாக்கி விடுகிறது. ஒரு நுண்மையான வாழ்வுக் கூறை பேசும் கவிதையில் சற்று கனமான சொல் இது. பொதுவாக சு.ராவின் மென்மையான கவிதைகளில் ‘கத்துவது’ ‘சீறுவது’ போன்ற உச்சபட்ச வினைச்சொற்கள் வலுக்கட்டாயமாக விழுகின்றன. இது ஒரு பிரச்சனையா அல்லது அவரது நடையின் ஒரு ஆபத்தற்ற கூறா?

- ஆர்.அபிலாஷ்

பனிமுலை- அறிமுகம்



பனிமுலை இலக்கிய, சமூக, அரசியல், கலாச்சார உரையாடல்கள் மற்றும் படைப்பாக்க பகிர்தலுக்கான ஒரு அமைப்பு. இது சென்னையை சார்ந்து இயங்குகிறது. இதற்கு பனிமுலை வாசகர் வட்டம் மற்றும் பனிமுலை படைப்பு வட்டம் என்று இரு தளங்கள் உண்டு. மாதம் இருமுறை சந்திக்கும் வாசக\படைப்பாளிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு படைப்பு அல்லது படைப்பாளி குறித்து விவாதித்து வருகிறார்கள். தங்கள் படைப்புகளையும் வாசித்து விவாதிக்கிறார்கள். தமிழின் முக்கிய படைப்பாளிகளும் கலந்து கொள்கிறார்கள். பனிமுலை நிகழ்வுகள் பற்றிய பதிவுகளும், அங்கு வாசிக்கப்படும் படைப்புகளும் இங்கு பிரசுரிக்கப்படும். பிற படைப்பாளிகளின் படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன. இவை தொகுக்கப்பட்டு காலாண்டிதழாகவும் வர உள்ளது.


முதல் சந்திப்பில் ஜி. நாகராஜனின் குறத்திமுடுக்கு நாவல் குறித்து விவாதிக்கப்பட்டது. கட்டுரைகளும் வாசிக்கப்பட்டன. இது குறித்த அறிக்கையும், கட்டுரைகளும் விரைவில் இத்தளத்தில் பதிவேற்றப்படும்.

பனிமுலை மனந்திறந்த உரையாடலுக்கான ஒரு பொதுவெளி. அடுத்த கூட்டத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். ஆர்வமுள்ளோர் பங்கேற்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு: 9884772864