Sunday, April 11, 2010

ஜராசந்தன்: ஒரு பின்-நவீனத்துவ கலகவாதி - மண்ணுண்ணி




ஜராசந்தன் யார் என்று எனது முந்தைய கட்டுரையின் வாசகரான பாஸ்கி கேட்டிருக்கிறார். அதனால் இங்கு ஒரு சிறு விளக்கம்.
ஜராசந்தன் ஒரு மகாபாரத பாத்திரம்। மகத நாட்டு மன்னன். அதை விட முக்கியமாய் ஒரு பின்-நவீனத்துவவாதி. வைணவக் கடவுளான கண்ணனுக்கு எதிராக கலகம் புரிந்தவன். உடலும் மனமும் துண்டுபட்டு இணையக்கூடிய அவன் ஒன்று பலவாறாக இருக்கக் கூடிய இன்றைய தலைமுறை தனிமனிதனின் புராணிக அச்சு.



ஜராசந்தன் பிறக்கும் போதே இரு துண்டுகளாக தோன்றுகிறான். அவனது தந்தையான மன்னர் பிருக்ரதன் கலவரமாகி பிண்டங்களை ஊருக்கு வெளியே வீசி அப்புறப்படுத்துமாறு ஆணையிடுகிறான். அங்கு ஜரா என்ற அரக்கி அவனை இணைத்து முழுமையான குழந்தையாக்குகிறாள். மன்னனிடம் மீண்டும் சேர்ப்பிக்கிறாள். இப்படி அரக்கியால் மறு-உயிர்த்த அவன் ஜராசந்தன் என்று அறியப்படுகிறான். இங்கு அரக்கி, அரக்கர்கள் ஆளும்வர்க்க ஆரியர்களால் ஒடுக்கப்பட்டு வனங்களில் வாழ நிர்பந்திக்கப்பட்ட இந்தியாவின் பழங்குடியினர் அல்லது ஆதிமக்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஜராசந்தனுக்கு உயிரளித்தது அரக்கி என்பது முக்கியமானது. ஏனென்றால் மன்னர் பதவியில் இருந்தாலும் விளிம்புநிலை அரசியலை வெளிப்படுத்தியவன் அவன். மற்றொரு அரக்க மன்னனான கம்சனுக்கு மாமன் முறை. பதினெட்டு முறை மதுரா நகரை முற்றுகையிட்டு வைதிக பாத்திரமான கண்ணனை ஊரைவிட்டே விரட்டியவன்.
ஜராசந்தனை அவ்வளவு எளிதில் யாராலும் தோற்கடிக்க முடியாது। எத்தனை சேதமுற்றாலும், வெட்டிப் பிளக்கப்பட்டாலும் அவன் உடல் மறுபடி ஒன்றாக பொருந்திக் கொள்ளும். மகாபாரதக் கதையில் ஜராசந்தன் கண்ணனை சற்றும் அஞ்சாமல் தொடர்ச்சியாக கெட்ட வார்த்தைகளால் வையும் இடம் ஒன்று வருகிறது. பிறகு வீமனுக்கும் ஜராசந்தனுக்கும் 27 நாட்கள் சண்டை நடக்கிறது. வீமன் சோர்ந்து போன தருணத்தில் கண்ணன் ஒரு தந்திரம் சொல்லித் தருகிறான். ஜராசந்தனை கிழித்து இருவேறு திசைகளில் அவன் மீண்டு பொருந்த முடியாவண்ணம் போட வேண்டும் என்பதே அது. இந்திய வரலாற்றில் மீண்டும் மீண்டும் நடந்து வருவது போல் அந்தண தந்திரத்தால் பிற இனத்தவர் தோற்கடிக்கப்படுகிறார்கள். இங்கு ஜராசந்தனை தோற்கடிக்க கண்ணன், வீமன் மற்றும் அருச்சுனன் அந்தண வேடம் பூண்டு வருகிறார்கள் என்ற குறிப்பு முக்கியமானது. வாமனனை தோற்கடிக்கவும் கண்ணன் அந்தண வேடமே அணிகிறான்.



இன்றைய யுகத்தில் நமது ஆளுமையும் அரசியலும் மீடியாவாலும், உலகமயமாக்கலாலும் பலவாறாக சிதறிக் கிடக்கிறது. நமக்கென்று ஒரு கருத்தை, நிலைப்பாட்டை உருவாக்குவதே பெரும் சவாலாக உள்ளது. உண்மை பலவிதமான பொய்களாலும், பொய்யென்று நினைப்பது சின்னஞ்சிறு உண்மைகளாலும் உருவாக்கப் படுகிறது. இங்கொன்றும் அங்கொன்றுமாக வாழவதில் சிந்திப்பதில், நேர்முரணான நிலைப்பாடுகளை எடுப்பதில் நமக்கு பல சமயங்களில் தயக்கம் இருப்பதில்லை. உதாரணமாக ஒருவர் கறுப்பு சட்டை அணிந்தபடியே காவி அரசியல் செய்யலாம். விளிம்பு நிலைவாதம் பேசுகிறவர்களிடமும் நுட்பமாக நிலப்பிரபுத்துவ சனாதன அரசியல் இயங்கலாம். மேலே இருப்பவரின் மிதியை வாங்கி நொந்தபடியே நமக்கு கீழே உள்ளவர் தலைமீது மேலும் இரண்டு மிதி போடுகிறோம். ஒரு பக்கம் அதிகார அரசியலை கடுமையாக சாடும் ஒரு பத்திரிகை மறுபக்கத்திலேயே அதிகார மையத்துக்கு வெளிப்படையாக கூழக்கும்பிடு போடலாம். வாசகர்கள் இந்த முரணை பொருட்படுத்தாமலே படிக்கலாம். எழுத்தாளனின் ஒவ்வொரு வரியும் முரண்படும் கருத்துக்களால் பின்னப்படலாம். இதனாலே இன்றைய மனிதனின் மனம் ஒரு சிதறுதேங்காய் என்றேன். ஜராசந்தன் உடலால் ஒரு சிதறுதேங்காயாக இருக்கிறான். இந்த பிளவுதான் அவன் ஆளுமையும். ஒழுங்கையும், நெறியையும் விழையும் பெருங்கதையாடல் பாத்திரமான கண்ணனுக்கு ஜராசந்தன் விரோதியானதில் எந்த வியப்புமில்லை. ஜராசந்தன் எந்த ஒரு குறிப்பிட்ட அடையாளத்துக்குள்ளும் மாட்டாமல் வழுவிக் கொண்டே போகிறான். ஏற்கனவே குப்பையான ஒன்றை மேலும் எப்படி குப்பையாக்க முடியும்? கலைந்த கேசம் எவ்வளவு கலைந்தாலும் கலைந்த கேசம் தானே. ஜராசந்தனின் சிதறல் இருப்பை மேலும் சிதறடிக்க முடியாது. இதனாலே அவனை கொல்ல முடிவதில்லை. இதனாலே ஜராசந்தனை ஒரு பின்-நவீனத்துவ கலகக்காரன் என்று கூறினேன். ஒரு பின் நவீனத்துவ ஆளுமையின் அழிவு என்பது அதன் பிளவுகளுக்குள் இயங்கும் குறைந்தபட்ச ஒருங்கிணைவை இல்லாமல் ஆக்குவது. இது முழுபைத்திய நிலை என்று இன்றைய மொழியில் சொல்லலாம். ஜராசந்தனை கண்ணன் இப்படித்தான் அழிக்கிறான். அவன் மீண்டும் இணைய முடியாதபடி இருகூறுகளையும் திசைமாற்றிப் போடுகிறான்.

No comments:

Post a Comment