Tuesday, April 6, 2010

தமிழியலாய்வுகள் - வரலாற்றின் மறைவோட்டங்கள்(1) உ.வே.சா-ஒளியும் நிழலும் -க.ரவிச்சந்திரன்.


பத்தொன்பதாம் நூற்றாண்டு, அறிவுத் துறைகளின் ஒருங்கிணைவுக் காலகட்டம்।தொழிற்புரட்சியின் தொடர் விளைவாய் பிரித்தானிய , போர்த்துகீசிய வரவுகள் இந்தியாவிற்குள் காலனிய வரலாற்றைத் தொடங்கி வைக்கின்றன।அச்சு ஊடகம் தமிழை அதன் சகல பரிமாணங்களிலும் நவீன படுத்திற்று।தொடர் வண்டி என்ற நவீன போக்குவரத்து ஒருங்கிணைப்புடன் உ।வே।சாவின் பதிப்பும் தேடலும் தொடங்குகிறது. குடந்தையில் ஆசிரியர் பணியும் சென்னையில் சீவக சிந்தாமணி பதிப்பும் என்பது ரயில்வண்டியின் வரவு இல்லையேல் சாத்தியமன்று. 1909 இல்தான் உ.வே.சா சென்னை மாநிலக் கல்லூரிக்கு மாற்றலாகி வருகிறார்.

குடந்தையில் உ.வே.சா தங்கியிருந்தபோதே சி.வை.தாமோதரம் பிள்ளை அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்று 1887இல் புதுக்கோட்டை சமஸ்த்தான நீதிபதிகளில் ஒருவராக இருந்து, பின்னர் 1885 இல், குடந்தையில் கருப்பூரில் வாழத் தொடங்கினார்.இங்குதான் சி.வை.தா வும் உ.வே.சாவும் கலந்து பழகினர். சீவக சிந்தாமணி பதிப்பு குறித்த மனஸ்த்தாபமும் சிறு பிரிவும் இருவருக்கும் இவ்விடத்தே உண்டானதை உ.வே.சா. வின் ’என் சரித்திரம்’ பகிர்ந்து கொள்ளும் செய்தி. சி.வை .தா. தம்மிடமிருந்து வஞ்சகமாக, சிந்தாமணி ஏடுகளை வாங்கிச் சென்றதாக உ.வே.சா குறிப்பிடுகிறார்.அனால் இந்நிகழ்வு ‘என் சரித்திரத்தில்’ மட்டும்தான், அதாவது சி,வை.தா வுக்கு எதிரான பதிவாக இடம்பெறுகிறது.மற்றைய, அவரின் உரைநடை நூல்கள் மற்றும் முன்னுரைகள் ஆகியவற்றில் சி.வை.தா வுக்கு எதிரான பதிவைக் காண்பது அரிது. இதனால் என் சரித்திரத்தில் சில பகுதிகள் உ.வே.சா வின் ஆத்ம சீடரான கி.வ.ஜா எழுதியிருக்கலாமோ என்ற ஐயத்தை கைலாசபதி, சிவத்தம்பி , ராஜ்கௌதமன் ஆகியோர் எழுப்புகின்றனர்.வையாபுரிப் பிள்ளையும் இதனை முன்பு குறிப்பிட்டுள்ளார்.இந்த ஐயத்தை என் சரித்திரத்தின் பிற்பகுதியிலுள்ள நடை வேறுபாடுகள் வலுப்படுத்துகின்றன.. ( உ.வே.சா )
எனினும் இதனை முற்றான முடிவாக எடுத்துக் கொள்வதற்கில்லை।பல பெரும் அளுமைகள் மீது இவ்வாறான சாடல்கள் ஐயங்கள் உண்டு. ஐன்ஸ்டைனின் சார்பியல் கொள்கையிலேயே அவரது மனைவி மிலோவா ஐன்ஸ்டைனின் பங்களிப்பு மறைக்கப்பட்டது என்ற அளவிற்கு கூட விமர்சனங்கள் எழுந்துள்ளன.ஆனால் இந்த ஐயம் எளிதில் புறக்கணிக்கத்தக்கதும் அல்ல.



உ।வே।சா வுக்கு ஏடுகளைப் பகிர்ந்து கொள்ளும் மனப்பான்மை இருந்ததில்லை என்பதை வையாபுரிப் பிள்ளை, உ।வே।சா வின் நினைவு நாள் சொற்பொழிவில் திருவல்லிக்கேணி இலக்கியக் கூட்டத்திலேயே பதிவு செய்துள்ளார்.(தமிழ்ச்சுடர் மணிகள் – 6) உ.வே.சா வின் சீவக சிந்தாமணிப் பதிப்பு நடந்தேறியவுடன் அதிலுள்ள பிழைகளைக் கண்டறிந்த வித்வான்களில் வையாபுரிப் பிள்ளை முதன்மையானவர்.. இவரின் சிந்தாமணிப் பதிப்பு, - சைவ சமாஜப் பதிப்பாக- 1941- இல் வெளியானது.அதில் உ.வே.சா வின் பதிப்பில் காணப்பட்ட பிழைகளைத் தொகுத்து அதன் முன்னுரையில் விரிவாகப் பேசியுள்ளார்.உ.வே.சா வின் சிந்தாமணிப் பதிப்புக்கு எதிராக வெளியான மற்றொரு கண்டன நூல் இலங்கையில் இருந்து வந்தது.
பொன்னம்பல தேசிகர் என்னும் தமிழ்ப் புலவர் வெளியிட்ட ‘ ஸீமத். வே. சாமிநாதைய்யரவர்கள் பதிப்பித்த சீவகசிந்தாமணி உரைப் பிழைகள்’ என்பதே அந்நூலாகும்.1887 இல் முதல் பதிப்பும் 1907 இல் இரண்டாம் பதிப்பும் வெளிவந்தது. முதல் பதிப்பில் அச்சிடப்பட்ட ஐநூறு பிரதிகள் அச்சுக் கூடத்திலேயே வீணாயின என்பது அன்றைய தொழில் நுட்ப பலவீனத்தை குறிக்கிறது.
உ।வே।சா சிந்தாமணிப் பதிப்பை செய்து வருகையில் சமண சமய விளக்கங்கள் வேண்டி சமண நண்பர்களை நாடிச் சென்றார்। அதில் சந்திரநாத செட்டியாரின் உதவியுடன் திண்டிவனம் வீடூர் கிராமத்தில் அப்பசாமி நயினார் என்பவரை அணுகி பல விளக்கங்களைப் பெற்றுள்ளார்। இவர், குடந்தை அரசுக் கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றிய, இந்திய அளவில் அறியப்பட்ட புகழ்பூத்த சமண அறிஞர் அ।சக்கரவர்த்தி நயினாரின் தந்தை ஆவார்।
அ.சக்கரவத்தி நயினாரின் நீலகேசி பதிப்பு சமய – திவாகர வாமன முனிவரின் உரையுடன் 1936 இல் வெளியாயிற்று.இதில் சக்கரவத்தி நயினாரின் சமண சமயம் குறித்த முன்னுரை ஆங்கிலத்தில் ஏறத்தாழ 300 பக்கங்களுக்கும் மேலாக விரிந்து செல்கிறது, தமிழ்ச் சமண மரபை சைவ நூல்வழியே அறிந்து வரும் ஒரு தமிழ் மாணவன் இத்தகைய மாற்று மரபை அதன் சொந்த களத்தில் எதிர் நோக்குதல் ஒரு புதிய புரிதலை வழங்கக் கூடியதாகும்.

இத்தகைய சமண நண்பர்களின் வழிகாட்டுதலை உ.வே.சா வுக்கு குடந்தை அரசுக் கல்லூரி சூழல் வழங்கியது. உ.வே.சா , பதிப்பியலில் முன்னோடித் தன்மையும் மாற்று சமயங்கள் மேல் காழ்ப்புணர்வற்ற நோக்கும் கொண்டிருந்த போதிலும் அன்றைய சுதந்திர போராட்டம் முன்னிட்ட தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு எழுச்சிகள் மிகுந்த சமூக அசைவியக்கத்திலிருந்தும் சரித்திரப் போக்கிலிலிருந்தும் உ.வே.சா விலகியே நின்றார்.
(சி.வை,தா)

வ.வு.சி, சிறையில் இருந்தபடியே திருக்குறளுக்கு உரை எழுத முற்பட்ட போது ஏற்பட்ட ஐய்யங்களை தீர்த்துக்கொள்ள உ.வே.சா வுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். உ.வே.சா , அதற்குத் தான் பதிலளித்தால் பிரிட்டிஷ் அரசோடு முரண்பட நேரிடுமோ என்றஞ்சி மாநிலக் கல்லூரியின் ஆங்கிலேய முதல்வரிடம் ஆலோசனைப் பெற்ற செய்தியை உ.வே.சா வின் உரைநடைப் பகுதி ஒன்றிலேயே காணலாம்.. இத்தகைய ஒரு சமூகப் பிரக்ஞையுடந்தான் உ.வே.சா செயல்பட்டுள்ளார்.
19 ஆம் நூற்றாண்டு மடங்களின் கல்விச் சூழல், சைவ மடங்களுக்கு இடையேயான பிணக்குகள், அன்றைய தமிழ் இலக்கிய-அரசியல் போக்குகள் ஆகியவற்றை கூர்ந்து அறிய உ.வே.சா வின் உரை நடை நூல்கள் மிக முதன்மையான தரவுகளாகும். இவற்றுக்குள் ஊடாடும் நுண் அரசியல் தளங்களை அறிய முற்படும் முதற் படியாக இக்கட்டுரை அமைகிறது
கூர்ந்து அவதானித்தால் சபாபதி நாவலரின் ‘திராவிட பிரகாசிகை’ என்ற நூல்தான் தமிழ் இலக்கிய வரலாற்று முன்னோடி நூல் எனலாம். இந்நூல் பற்றி தமிழில் அதிகம் பேசப்படவில்லை. பேரா.சிவத்தம்பி மட்டுமே தனது ‘ தமிழில் இலக்கிய வரலாறு ‘ எனும் நூலில் போகிற போக்கில் சுட்டிச் செல்கிறார். இது குறித்த விவாத்த்திற்கு இனி அடுத்த தொடரில் வருவோம்.

நவீன கல்வி உருவாக்கத்திற்கான பாட நூல்களாக தமிழிலக்கியத்தை அச்சேற்றம் செய்த தமிழறிஞர்கள், அதை எதிர்த்து எழுதிய தியாகராஜ செட்டியார் போன்ற குடந்தைத் தமிழ்ப் பேராசிரியர்கள் , ஆறுமுக நாவலரைத் தொடர்ந்து தமிழ் நூல் பதிப்பில் இயங்கிய சி.வை.தா , சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை சார்ந்த மழவை மகாலிங்க ஐயர் போன்றோரின் தொல்காப்பிய பதிப்புகள் , ரா.ராகவையங்கார் தலைமையில் வெளியான ‘ செந்தமிழ்’ இதழில் வந்த ஆராய்ச்சி கட்டுரைகள் - என 19 ஆம் , 20 ஆம் நூற்றாண்டு அறிவுப் புலம் பல்வேறு சுவாரசியங்களை உள்ளடக்கியிருக்கிறது.அது வரலாற்றின் மறைவோட்டங்கள் பலவற்றை நமக்குச் சொல்கிறது.இதனை அடுத்து தொடர்வோம்...
.......தொடரும்

1 comment:

  1. நண்பர் இரவி நல்லதொரு கட்டுரையைத் தந்துள்ளார். அவருக்கு என் வாழ்த்துகள் .

    ReplyDelete