Sunday, July 25, 2010

அவர்கள் வேறொரு காலத்தைச் சேர்ந்தவர்கள்- பிரவீண்


அவர்கள் வேறொரு காலத்தைச் சேர்ந்தவர்கள்.
ஒரு புள்ளியிலிருந்து மறு புள்ளிக்கானது அவர்களது பயணம்.
அவை எதையும் இணைப்பதில்லை.
ஒரு நதியின் கோடையிலிருந்து அதன் பிறிதொரு பருவத்திற்கு
கனிகளின் மௌனத்திலிருந்து இலைகளின் விளையாட்டிற்கு
தன்னிச்சைகளின் ஒரு திசையிலிருந்து பிறிதொரு திசைக்கு
பல சுழல்கள் கொண்டது அவர்கள் பயணம்.
அவர்கள் பிரக்ஞையில் வரலாறோ மொழியோ கிடையாது.
நட்சத்திர ஒளியின் காமம் மலர்ந்த இரவுகளும்
அதிகாலையில் கவித்துவம்கொள்ளும் மரங்களுமே
அவர்களின் மனப்படிமங்கள்.
அரிதாக அவர்களைக் கடந்து செல்லும்
நீல இறகுப் பறவைகள் அவர்களின்
நன்னிமித்தங்கள் ஆகி வருகின்றன.
பிரபஞ்சத்தின் ஒரு மௌனப் புள்ளியில்
திரளாக அசைந்து செல்கிறார்கள்
வேறொரு காலத்தின் தொலைவிலிருந்து
வேறு விழிகளால் கவனிக்கப்படுவதையோ
வேறு மொழியால் வாசிக்கப்படுவதையோ
அவர்கள் அறிவதில்லை.
இன்னும் பிறக்காத ஒரு மொழியின் முதற் படிமங்கள்
அவர்களுக்குள் வெடிக்கும்போது
புதிய உன்மத்தமும் கிறுக்கும் பிடிக்க
அவர்களது காலம் உடைந்து போகலாம்.
தற்போது
சூரியன் அத்தமிக்கும் மலை முகட்டின் பின்னணியில்
நகர்ந்து கொண்டிருக்கும் சிறிய கருங்கோடு
அவர்கள்தான்

Sunday, July 4, 2010

ராவணன்: கண்ணைக் கட்டி காட்டில் விட்ட கதை - மாமல்லன் கார்த்தி




ராவணன்(சிறப்புக் காட்சி ): அதிகாலை நாலரை மணி, கோவில் நடை திறப்பதற்காக காத்திருக்கும் பக்தகோடிகளை போல, மடை திரண்டு வந்திருந்தார்கள் விக்ரம் ரசிகர்கள். நடை திறந்ததும், கூச்சலும் கும்மாளமும் வானவேடிக்கைகளும் கேட்கவே வேண்டாம். படம் துவங்கியது. ஐந்து நிமிடத்திற்குப் பிறகு சத்தமே இல்லை, அவ்வளவு ஒன்றிப்போய் படம் பார்க்கிறார்கள் என்று நினைத்தேன், இடைவேளையில் விளக்குகள் போட்டதும் எல்லோரும் துயிலேளுந்தார்கள், பின் பாதியில் எங்களை தட்டி தட்டி எழுப்பினார்கள் மணிரத்னமும் ரஹ்மானும்..ஒரு வழியாக எங்களை பார்க்க வைத்துவிட்டார்கள்.

புராண இதிகாசங்களில் இருந்தும் இன்னபிற சர்வதேச இத்யாதிகளில் இருந்தும், கதைச்சரடைப் பின்னி.. நாட்டில் தற்போது நடக்கக்கூடிய முக்கிய பிரச்சனை ஒன்றை, பிரச்சனையே இல்லாமல் சொல்லிவிட வேண்டும் என்று, பறவையின் பார்வையில் (birds view) அந்த துக்கம் நிறைந்த காடுகளை கடந்து (escape) செல்கிறார் மணி. பழைய மாவையே வேறுவிதமாக அரைத்து மசாலா தடவ முயற்சித்திருக்கிறார், ஆனால் மாவு புளிப்பு தட்டி விட்டது. படத்தில் சித்தரிக்கப்பட்ட உலகத்தில் ஒரு நம்பகத்தன்மை இல்லாதது.. உண்மையில் இது ஹிந்தி மொழிக்காக செய்யப்பட்டதால் இருக்குமோ என்று நினைக்க வைக்கிறது.. சுஹாசினியின் வசனங்கள் அவ்வப்போது பெண்ணிய நிலைப்பாடுகளை பற்றி கதைக்கிறது.. இருந்தும் என்ன பிரயோஜனம்?.. ராகினி (ஐஸ்..) தன் பத்தினித்தனத்தை நிரூபிக்க வேண்டியதாக உள்ளதே..?(அதிலும் ஒரு சிண்டு முடிக்கிறார் மணி.. அதாவது வீராவை பிடிபதற்காக அவளது கணவன் போடும் நாடகமாம் அது.. பேத்தல்!). இன்னொரு கொடுமை வேறு உள்ளது, படத்தில் கடைசி வரை வீரா (விக்ரம்) ராகினியை தொடுவதே இல்லையாம்.. ஆனால் படத்தில் வரும் மற்ற குண்டர்கள் சகட்டுமேனிக்கு அவளை பிடித்திழுகிறார்கள், வீரா மட்டும் அவளை தொடாமலேயே தொட்டுவிட்டு பாதாளலோகத்தை சென்றடைகிறான். கவித்துவம்!!

படம் எனக்கு பல படங்களின்(apocalypse now, rashomon, north by north west, crouching tiger hidden dragon இன்னும் தோண்டினால் நிறைய கிடைக்கும் போல), பல கணங்களை நினைவு படுத்தியது, முக்கியமாக 'காதல் கொண்டேன்' . அந்த கிளைமாக்சை (climax) செல்வராகவன் 'உணர்வுரீதியாக' மிக சிறப்பாக செய்திருந்தார் என்று தோன்றுகிறது.

படத்தின் அடி நாதம் என்ன? ஒடுக்கப்பட்ட ஒருவனுக்கும், மேல் தட்டில் வாழும் ஒருத்திக்கும் (இந்த படத்தில் பழங்குடியினனுக்கும்-உலக மயமாக்கத்தில் இருப்பவளுக்கும்) ஏற்படும் நூல் இழையிலான அன்பும், காதலும், பரிதாபமும்..அவர்களின் உறவு தான் சூட்ச்சமம்... இந்த காரியத்தை ஒரு வகையில் செல்வராகவனின் 'காதல் கொண்டேன்' படத்தில் செய்திருக்கிறார்.. வினோத்(தனுஷ்) ஒடுக்கப்பட்ட வலியினால் மனசிக்களுக்குள் இருப்பவன்.. அவனது கதாபாத்திர வார்ப்பு நம்பகத் தன்மையுடன் இருந்தது.. வினோதிற்கும் திவ்யாவுக்கும் உள்ள உறவின் அலைகழிப்புகளை, போராட்டங்களை மிக வலிமையாக சொல்லி இருந்தார்.. மணிரத்தினம் அவர்களோ, தன் புரட்சி செய்யும் மகோன்னதமான கதாபாத்திரத்தை ஒரு பைத்தியத்தை போல் உளற வைத்து கேவலப்படுத்திவிட்டார் என்றே கருதுகிறேன்..அழகான காட்சிகளையும், நடனங்களையும் பாடல்களையும் வைத்துக்கொண்டு எத்தனை நேரம் தான் ஓட்ட முடியும்..? 360 degree'யில் தேவையில்லாமல் காமெராவை வைத்துக்கொண்டு circus விளையாட்டை காண்பித்துக் கொண்டிருந்தார் மணி..முக்கியமான உணர்வெழுச்சி மிக்க சில காட்சிகளை, நம்மை சேர விடாமல் தடை செய்துவிட்டார்.. சந்தோஷ் சிவனை வீணடித்துவிட்டார். ' நீர்' என்பதை ஒரு குறியீடாக 'Terorist' படத்தில் சந்தோஷ் சிவன் பயன்படுத்தியிருந்தார்.. அது தன் மூல கதாபாத்திரத்தின் உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த மாற்றத்தை பிரதிபலிப்பதற்கு மிக சரியாய் பொருந்தியது.. ஆனால் ராவணனில் அது ஒரு விளம்பர படத்தில் வருவது போன்று செயற்கையாக மாறிவிட்டது. அது ஒரு வித்தை என்பதைத் தவிர ஒன்றும் இல்லை.. ரஷிய திரைமேதையான் தார்கொவிஸ்கி(Tarkovsky) தனது படங்களில் 'நீரை' நம் பிரபஞ்சத்தின் குறியீட்டுத் தன்மையுடன் உள்ளார்ந்த கவித்துவத்துடன் மாற்றி இருப்பார்.. அங்கிருந்து தாக்கத்தை உள்வாங்கிக் கொண்ட சந்தோஷ் சிவன் Terorist படத்தில் புரிதலோடு செய்திருந்தார்.. இராவணன் படத்தில் ஐஸ்வர்யா ராய் தனது நீர்கோர்த்த கூந்தலை அவள் முகத்தின் முன் தலைவிரி கோலமாக கொண்டுவரும் காட்சி அப்படியே தார்கொவிஸ்கியின் Mirror படத்தில் இருந்து சுட்டது. ஒரு கலைப் படைப்பில் இருந்து உருவி எப்படி ஜீவனற்ற சரக்காக மாற்றுகிறார்கள் என்பதற்கு இது நல்ல உதாரணம் .

மணிரத்னம் அவர்களின் வார்த்தையில் சொன்னால் 'Direction is like management' . மணிரத்னம் ஒரு தேர்ந்த வியாபாரி, சினிமா ஊடகம் சார்ந்த அழகியலை, தான் கண்டு ரசித்த உலகப் படங்களின் நுட்பங்களை, தான் இயங்குகிற தளத்திற்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதில் புலமை உடையவர். அந்த வகையில் அவர் ஒரு 'skilled filmmaker என்று சொல்லலாம். இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் இன்னும் popular cinema'வில் முன்னிலையில் உள்ளவர்கள் யாரேனும் இருக்கிறார்களா? அந்த வகையில் அவருக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. மேலும், அவர் ஒரு தெளிவோடு இயங்கி வருகிறார், அவருக்கு எது கலை -எது வியாபாரம், -தான் எங்கு இருக்கிறோம் என்ற உண்மை தெரிந்திருக்கிறது. இயக்குனர் சேரனை போன்று 'தென்னகத்தின் சத்யஜித் ரே' என்று போஸ்டர் ஒட்டும் காரியங்களில் என்றுமே அவர் ஈடுபட்டதில்லை. அதே போல் அவர் எங்கிருந்து சுடுகிறார் என்ற கேள்விக்கும் சரியான பதில் அளிப்பதில்லை. அதை தாண்டி அவர் சுடும் படங்களுக்கு அவர் பெரும்பாலும் நியாயம் செய்வதில்லை. நம் நாட்டில் லஞ்சம் வாங்குவது சகஜம் தானே! அதையெல்லாம் யாரவது சொல்லிக் கொண்டா இருகிறார்கள்? it has become legitimate. Tarantino'வை எடுத்துக்கொண்டால், அவன் தனக்குப் பிடித்த எல்லாவற்றிலிருந்தும் சுடுகிறான், அது ஒரு தந்தையிடம் மகன் எடுத்துக்கொள்ளும் உரிமையை போன்றது. அந்த உயிர்ப்போடு அது இருக்கிறது, அது தன் ரசிபபுக்குளிருந்து தனிச்சையாக மலர்வது, அது சிருஷ்டி. அங்கே தந்திரங்கள் ஏதுமில்லை. ஊழல் கிடையாது(No corruption).

ராவணன் படத்தின் பின் இருக்கும் நடிகர்களின், தொழில்நுடக் கலைஞர்களின் சிரத்தையை பற்றி சொல்லத் தேவையில்லை. இதற்காகத்தான் இத்தனை இம்சைகளை அனுபவித்தார்களா என்று ஆச்சர்யப்பட்டேன், மேலும் ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது, ஐஸ்வர்யா ராய் என்ற நடிகையை கண்டாலே தலை தெறிக்க ஓடும் நான், அவரின் பங்களிப்பை சகித்துக் கொண்டேன்.. பிரபுவையும் கார்த்திக்கையும் காமெடியன்களாக ஆக்கிவிட்டார் மணி. என்ன சொல்வது, படம் பத்து நாள் நன்றாக ஓடினால் போதும், கல்லா கட்டிவிடலாம் என்று நினைத்துவிட்டார் போல!!

இணையத்தளத்தில் தற்போது வந்து கொண்டிருக்கும் இராவணன் விமர்சனங்களை படித்து வருகிறேன்.. முடியல!! சும்மா எடுத்ததற்கெலாம் 'making is superb' என்கிறார்கள்..

நான் கேட்கிறேன்: அய்யா! நம் மணிரத்தினம் அவர்கள் இருபத்தி ஐந்து வருடங்களாக சினிமாவில் இருப்பவர், அவரது செய்நேர்த்தி நாம் அறிந்ததே, அவர் பயன்படுத்தும் தொழில்நுட்பக் கலைஞர்கள் யாவரும் இந்தியாவில் சிறந்தவர்கள், சந்தோஷ் சிவன், ஸ்ரீகர் பிரசாத், ரஹ்மான்.. என்று நீள்கிறது... இவர்கள் கூட்டணியில் இது கூடவா வராது?..இதைத் தாண்டி படத்தில் என்ன இருக்கிறது என்று கேட்டால், கம்பராமாயணம், வால்மீகி ராமாயணம், சீதாயணம் என்று காமெடி பண்ணுகிறார்கள்.. சரி..இதெல்லாம் வைத்துக்கொண்டு என்ன சொல்கிறீர்கள் என்றால்.. அரசியல்!! என்று ஒரு குண்டைப் போடுகிறார்கள், வீரப்பன், நக்சலைட் இயக்கம், இலங்கை பிரச்சனை, என்று சொல்லி நம்மை துன்புறுத்துகிறார்கள்.. சட்டியில் ஒன்றும் அப்படியில்லை..ஏன் வெறுங்கையில் முழம் போடுகிறார்கள்?.. மணிரத்னம் படமெடுதிருக்கும் காடுகளில் காணப்படும் குண்டுகளும் குழிகளும் போல, அவரது திரைக்கதை பல சரிவுகளோடு உள்ளது.. இதை வைத்துக்கொண்டு என்னென்னமோ அரற்றுகிறார்கள்..என்னை பொறுத்த வரையில் இராவணன் ஒரு ஜீவனற்ற சவம்.. அந்த சவத்தின் அலங்காரங்களை கொஞ்சம் ரசிக்கலாம்.. மணிரத்தினம் படங்களில் முன்பு இருந்த 'ஓட்டை அரசியல்' கூட இதில் இல்லை .. உண்மையை சொன்னால் ஒன்றுமே இல்லை.. அவர் பல விஷயங்களை சொல்ல வந்திருக்கலாம், ஆனால் எதுவுமே நம்மை சேரவில்லை, வந்தடைய வில்லை.. அதன் இல்லாத அரசியலையோ.. சோர்வூட்டும் அழகியலையோ..பற்றி பேசுவதில் எனக்கு விருப்பம் இல்லை.

அய்யா! படத்தின் சூத்திரம் இது தான் : "ஒரு நல்லவன் - கெட்டவன், உண்மையில் கெட்டவனுக்கு ஒரு பெரிய நியாயம் இருக்கிறது, இவர்கள் இடையில் ஒரு பெண்- சல்லாபங்கள், சஞ்சலங்கள்,மோதல்கள்..அவள் நினைப்பது போல் அவன் கெட்டவன் அல்ல என்று புரிகிறது , கடைசியில் ஊருக்காக உழைத்த அந்த கெட்டவன் பரிதாபமாக, அனாதையை போல் சாகிறான்.." இது தானய்யா formula..!! இதை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம்?.. location புதிதாக மாற்றலாம், சில சித்து விளையாட்டுக்களை செய்யலாம்..இதிகாச அல்லது அரசியல் சாயம் பூசலாம்.. நல்ல விலைக்குப் போகக்கூடிய சரக்கை உற்பத்தி பண்ணலாம் ..அவ்வளவு தான்.!!.

cinemams@gmail.com

மாமல்லன் கார்த்தி கவிதைகள்











என் நகர்புறத்து மஞ்சள் இரவில்
ஒரு கோவில் திருவிழாவின் தெய்வீக ஓலம்
மிரண்டோடி வந்த
நாய்கள்
என்னை விநோதமாய் பார்த்தன
***********************************

அவள் பொம்மைகளை நேசிக்கத் துவங்கிய நாள் எதுவென்று அறிந்திருக்கவில்லை
நினைவில் தங்காத ஏதோ ஒரு நீண்ட தனிமையைத் தாழிட்டுக்கொள்ள
பொம்மைகளை நாடியிருந்தாள்
முதிர் கன்னியின் உடல் வாகும்
முதிராத உள் மனமும் கொண்டிருந்தாள்
பொம்மைகளோடு பேச முடிந்ததும்
முத்தமிட்டு விளையாட முடிந்ததும்
புரண்டு படுத்து அனைத்துக் கொள்ள முடிந்ததும்
இறுகிச் சிதறும் மௌனங்களில் கட்டி அழ முடிந்ததும்
அவளுக்கு பெரும் ஆசுவாசம் தந்தது
மூப்படையாத, எதிர்த்துப் பேசாத
பொம்மைகள்
மனித உறவுகளை விட மேலானதாக எண்ணினாள்
மயங்கிக் கிடந்த
மாலைப் பொழுதொன்றில்
என்னையும் பொம்மைகளோடு சேர்த்துக் கொண்டாள்
சிரிக்கும் பொம்மைகளை பார்த்துப் பழகி இருந்தவள்
கண்ணீர் விடும் பொம்மைகளை கண்டதில்லை
பரவசம் கொண்டு குதித்துக் கை தட்டினாள்
பொம்மைகளின் உலகத்தில்
நான் தான் தலைவன்
என்று சொல்லி கருணை முத்தமொன்றை அளித்தாள்
cinemams@gmail.com

Friday, July 2, 2010

மதன் கவிதைகள்

மலைப்பாம்பின் மௌனம்
















சிகப்புக்கும், மஞ்சளுக்கும் இடையே
அமைதியாயிருந்தது
மஞ்சளுக்கும், பச்சைக்கும் இடையே
என்ஜின் உறுமல்களில்
சூடேறிக் கொண்டிருந்தது.


மலைப்பாம்பாய்ப்
பருத்துப் படுத்திருந்தது
வேகத்தடையொன்று.
சிக்னலின் சாத்தியங்களைப்
புறக்கணித்தபடி.


தற்காப்பு



வயலெட் நிறப் பூக்கள்
இறைந்து கிடக்கும் பூங்காவைக்
கடக்கையிலெல்லாம் அவற்றைக்
கை நிறைய அள்ளி வரும்
ஆசையை கவனமாய் தவிர்த்து விடுகிறேன்


பூக்களின் கீழே
உதிர்ந்து கிடக்கும்
நினைவுகளின் பயத்தால்

Thursday, July 1, 2010

கதவுகளற்ற வீடு - ஆர்.அபிலாஷ்





வாசலின் குறுக்காய் தூங்க பிரியப்படும் பூனை

கதவுகளை மூடப் போவதாய் மிரட்டினாலோ

பலம் பிரயோகித்தாலோ

அன்றி

இரு திசைகளில் ஒன்றை

தேர்ந்திட விரும்புவதில்லை

Wednesday, June 2, 2010

அவனுடைய நாற்பத்து மூன்றாவது பிறந்தநாளுக்கு பிறகு - நளினி சங்கர்

















திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தும்
அவன் அம்மாவின் கடிதங்களின் வருகை
குறைந்து போயிருந்தது.

எப்பொழுதாவது உணவகங்களில் கை கழுவும்போதோ
முடிதிருத்தத்தின்போதோ
பார்க்க நேரும் கண்ணாடிகள் மீது
அவனுக்கு குற்றச்சாட்டுக்கள் உண்டு.
அவைகள் அவனுடைய முகத்திற்கு பதிலாக
வேறு ஏதோ ஒரு முகத்தை காண்பிக்கின்றதாம்.

இப்போதெல்லாம்
எதிர்ப்படும் எந்த மார்பகங்களும்
அவனை கிளர்ச்சியடையச் செய்வதில்லை.
நீண்ட நேரம் அடக்கி வைத்துக்கொண்டிருந்து
சாவுகாசமாக கழிக்கும்
சிறுநீரின் சுகமே
அவனுக்கு போதுமாய் இருக்கின்றது

Wednesday, May 19, 2010

குரலிழக்கும் வார்த்தைகள் - கதிர்பாரதி




கொஞ்ச காலமாய் என் கூடவே
வசித்துவருகிறது நீ கண்டறியாத மவ்னம்

மவ்னம்தான் எனினும்
உனக்குச் சொல்லும் சம்மதமில்லை
மரணம் விதைக்கும் மவ்னத்தைப் போன்று அது
துக்க நிறத்தைப் பூசிக்கொண்டதுமில்லை

மவ்னம் உடைபடும் பின்னொருசமயத்தில்
அதற்குள் கனலும் வெப்பத்தாலும்
வெடிக்கக் காத்திருக்கும் கேள்விகளாலும்
அதிரக்கூடும் உன் கள்ள மவ்னம்

போராளியின் கடைசிக்குண்டைப் போல
பிரயோகமாகப் போகும் அம்மவ்னம்
பருந்தை எதிர்த்தடிக்கும் தாய்கொழிஎன
தோற்றம்கொள்ள காத்திருக்கிறது

அப்போதெழும் பேரோலத்தில்
உன் வார்த்தைகள் குரலிழந்து போகும்

Friday, April 23, 2010

தற்கொலைப் பிரியங்கள் - மதன்




பிரியங்களைப் புதைத்து வைக்கும் பூங்காக்கள்
பிரியங்களைப் பூட்டி வைக்கும் கதவுகள்
பிரியங்களைப் பிரித்து வைக்கும் தீர்ப்புகள்
பிரியங்களை உடைத்து விடும் அனுமானங்கள்
பிரியங்களால் உடைந்து விட்ட தன்மானங்கள்
பிரியங்களை உருக்கி விடும் வார்த்தைகள்
பிரியங்களை எரித்து விடும் சந்திப்புகள்
பிரியங்களைச் சிதைத்து விடும் சந்தேகங்கள்
பிரியங்களைக் கிழித்து விடும் வாக்குவாதங்கள்
பிரியங்களில் விரிசலிடும் கடிதங்கள்
பிரியங்களை அசைத்து விடும் போட்டிகள்
பிரியங்களைக் கசக்கி விடும் பருவங்கள்
பிரியங்களைச் சுருக்கி விடும் போதைகள்
பிரியங்களை இறுக்கி விடும் பயணங்கள்
பிரியங்களைத் தொலைத்து விடும் பரஸ்பரங்கள்
பிரியங்களைக் கலைத்து விடும் முத்தங்கள்
பிரியங்களைப் பிய்த்து விடும் சுயங்கள்
பிரியங்களைத் தவற விடும் இச்சைகள்
பிரியங்களைப் பிளந்து விடும் ஆத்திரங்கள்
பிரியங்களை மூழ்கடிக்கும் புரிதல்கள்
பிரியங்களைச் சாய்த்து விடும் பிடிவாதங்கள்
பிரியங்களை நிறுத்தி விடும் முரண்பாடுகள்
பிரியங்களை இழந்து விடும் தோள்கள்
பிரியங்களைக் கவிழ்த்து விடும் ஆசைகள்
பிரியங்களை நொறுக்கி விடும் இயலாமைகள்
பிரியங்களைப் பிழிந்து விடும் கடமைகள்
பிரியங்களை ஒடித்து விடும் நீங்கள்
பிரியங்களைத் துரத்தி விடும் நான்கள்
பிரியங்களைக் கொன்று விடும் நாம்கள்
யாவற்றையும் விட
பிரியங்களால்
தற்கொலையுண்ட
பிரியத்தின்
ரணமே கொடிதாகிறது

இயல்பாய் இருப்பதில் - செல்வராஜ் ஜெகதீசன்




ஆண்களேதுமின்றி
அழகிய பெண்ணொருத்தியோடு
ஆறேழு மாடி வரை
பயணிக்க நேர்ந்திருக்கிறது.

இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்த
இரண்டு பெண்களுக்கிடையிலும்
இருக்க நேர்ந்திருக்கிறது
எத்தனையோ முறை.

முழுக்கவும் பெண்கள் சூழ
மேற்கொண்ட பயணங்களுமுண்டு.

ஆகக்கூடி வாய்த்த
அத்தனை லிப்ட் பயணங்களிலும்
அடியேன் கண்டெடுத்தது
நண்பர்களே!

இயல்பாய் இருப்பதில்
இருக்கும் அத்தனை
சிரமங்களையும்.

ரூத் ஸ்டோன் - சிறுகுறிப்பு



ரூத் ஸ்டோன் 1915-இல் வெர்ஜீனியாவில் பிறந்தார். பிங்ஹேம்டன் பல்கலையில் ஆங்கிலப் பேராசிரியர். அவரது சமீபத்திய கவிதை நூல்கள் Second Hand Coat (Yellow Moon Press), Who Is the Widow’s Muse (Yellow Moon Press) மற்றும் Simplicity (Paris Press). ரூத் 2002-இல் Wallace Stevens விருதை பெற்றார். Bess Hokin Award, Shelley Memorial Award, Vermont Cerf Award, National Book Critics Circle Award, மற்றும் the National Book Award ஆகியன இவர் மேலும் வென்றுள்ளவை.

ஒரு கணம் - ரூத் ஸ்டோன் (தமிழில் ஆர்.அபிலாஷ்)



நெடுஞ்சாலைக்கு குறுக்கே வெள்ளம் சூழ்ந்த வயலில் ஒரு நாரை நிற்கிறது. அது சிந்தனையில்
ஆழ்ந்தது போல், ஒற்றைக் காலில், அசட்டையாக
ஏதோ அவ்வயலே நாரைகளுக்கு சொந்தம் என்பது போல் நிற்கிறது.
காற்று தெளிவாய் நிசப்தமாய்.
இந்த இரண்டாம் வறண்ட நாளில் பனி உருகுகிறது.
அம்மாவும் மகளும்,
நாம் வாகன நிறுத்துமிடத்தில்
டோனட்ஸ் மற்றும் காபியுடன் அமர்ந்துள்ளோம்.
நாம் மௌனமாக உள்ளோம்.
ஒரு கணத்திற்கு நம்மிடையே உள்ள சுவர்
பிரபஞ்சத்திற்கு திறக்கிறது;
பிறகு மூடுகிறது.
மேலும் நீ தொடர்ந்து சொல்கிறாய்
உனக்கு என் வாழ்வை திரும்ப வாழ வேண்டாம்.

நன்றி: The Best American Poetry 1999

Monday, April 19, 2010

ஜி. நாகராஜன் குறத்தி முடுக்கு - உடலின் ஆன்மா. - பிரவீண்


ஜி. நாகராஜன் குறத்தி முடுக்கு - உடலின் ஆன்மா.


நாவல் என்பதே ஒரு மத்தியதர வர்க்க வடிவம் என அறியப்பட்ட காலம் ஒன்று உண்டு.இங்கு மத்தியதர வர்க்கம் என்பது ஒரு பொருளியல் மட்ட மக்கள் திரளை குறிக்கவில்லை.மத்தியதர வர்க்கம் என்பது அது சார்ந்த ஒரு மன நிலை, உறைந்த மதிப்பீடுகள் , , தினசரித்தன்மை முதலியவற்றையும் சுட்டுகிறது. தமிழ்ப் புனைவு வெளியில் குறிப்பாக மணிக்கொடி – எழுத்து என்ற தடத்திலான ஒரு நவீனத்துவ உருவாக்கத்தில் இந்த மத்தியதர வர்க்க மனோபாவத்தின் மேலாண்மையை மறுப்பதற்கில்லை.குறிப்பாக தமிழ் நாவல் வெளியில் மனம் சார்ந்த நெருக்கடிகளின் நூற்றுக் கணக்கான கோலங்கள் காணக்கிடைக்கும் அளவுக்கு உடல் சாந்த வன்முறைகள் , அதன் மீதான சமூக கலாச்சார நிறுவனங்ளின் ஒடுக்குமுறைகள் குறித்த கவனஙகளை காண இயலுவதில்லை. வரலாறு எனும் பெரும் திரையில் மனித உடலின் வலியும் துடிப்பும் மிக்க நடனத்தைத் தமிழ் நாவல் மிக அரிதாகவே தொடுகிறது.வடிவத்தில் எத்தனைப் புதுத் திறப்புகள் வந்தாலும் அனுபவம் சார்ந்த தீவிரமான விரிந்த வாக்கைத் தளங்கள் இல்லாதபோது கலைரீதியாக ஒரு படைப்பு கொள்ளும் முடக்கம் இரங்கத்தக்கது. ஆனால் உலக நாவல் மேற்குறித்த நடுத்தர வர்க்கத் தன்மையைத் தாண்டி எத்தனையோ உயரங்களைத் தொட்டுவிட்டது. நவீன வாழ்க்கையின் நுண்களங்களைத் தீண்டவும், , சமூகம் வரலாறு பண்பாடு என்ற பின்னலான வெளியில் மனித சலனங்களை பிரதிபலிக்கவும், வாழ்வின் எல்லையின்மையை அகலத் தழுவி விரியும் விவாத வெளியை கட்டமைக்கவும் மிக நெகிழ்ந்ததும் உரையாடல் தன்மை வாய்ந்ததுமான ஓர் உயர் கலை வடிவம் நாவல்தான் என்பதை உலக நாவல் வரலாறு நிரூபித்திருக்கிறது.



தமிழ் நவீனத்துவத்தின் கட்டுபெட்டித் தனங்களுக்கு எதிராக, உள்ளிருந்து எழுந்த தீவிர குரல்களாக வெளிப்பட்ட ஜி. நாகராஜன், பிரமிள் முதலியோர் சராசரித் தன்மைக்கு எதிரான தங்கள் கவர்ச்சிமிகு வாழ்விலிருந்தும் ஆளுமையிலிருந்தும் நம்மை ஊடுருவுகின்றனர். இங்கு ஜி.நாகராஜனை எடுத்துக் கொள்ளும் போது குடுமப எல்லைகள் தாண்டாத ஒரு தமிழ் நவீனத்துவத்திற்குள் உருவாகி வந்த நாவலின் நிறுவப்பட்ட மரபுகளுக்கு எதிராக அவரது பயணம் தொடங்குகிறது. ஜி. நா. வின் படைப்புலகம் முதலில் பௌதிகமான நிலைமைகளில் இயங்காத நவீனத்துவ புனைவுகளின் மனவெளியிலிருந்து, குருதியும் தசையுமாய் அதிர்ந்து கொண்டிருக்கும் சமூக எதார்த்தங்களின் அடிமட்டத்திற்கு தரைஇறங்குகிறது.அப்படித்தான் குறத்தி முடுக்கு தமிழ்ப்புனைவில் ஒரு புதிய திறப்பாக வருகிறது. அது காட்டும் உலகம் நவீனத்துவத்தின் அறிவார்த்த நாகரீகத்தின் அதிர்ச்சிமிக்க பின்தோற்றம்.வரலாற்றின் இக்கட்டத்தில் மனித உடல்களின் புதிய அதிர்வுகளை அது ஏந்துகிறது. அங்கு நவீன யுகத்தின் கோட்பாட்டுத் தர்க்கங்களும் , கற்பித லட்சியங்களும் சிதறிக் கொண்டிருக்கின்றன. சுதந்திரம், சட்டம், சமூக ஒழுங்கு, காவல், நீதி, நிர்வாகம் என்ற நவீன சமூக கண்ணாடிக் கவர்ச்சிகளின் ஆழ்த்தில் ஒளிந்திருக்கும் கைப்பையும் வன்மங்களையும் அது அகழ்ந்தெடுக்கிறது. குறத்தி முடுக்குவில் பேசப்படுவன எல்லாம் உடல்கள். அவை இந்த நவீன சமூக அதிகாரங்களின் அதிகபட்ச வன்முறைகளுடன் தம் அடிப்படை வாழ்விச்சைகளோடு மோதியபடியே தம் தினசரியில் நவீன வாழ்வின் புதிர்மிக்க நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கின்றன.இதுதான் குறத்தி முடுக்கின் களம்.. இதன் மீதான ஒரு கோடிட்டுக் காட்டல்தான் தங்கம் என்ற பாலியல் தொழிலாளிக்கும் பெயர் சுட்டப்படாத ஒரு பத்திரிக்கையாளனுக்கும் இடையிலான, மரபான வடிவங்களில் பிடிபடாத ஒரு காதலின் புதிர்மிக்க சலனங்கள்.


இந்தப் பத்திரிக்கையாளன் வாழ்க்கை பற்றி சில தெளிவுகள் கொண்டவன். காமத்தை ஒரு இச்சை தீர்ப்பு என்பதுக்கு அப்பால், அதில் காதலின் மாய சிறகுகள் முளைப்பதற்கான சாத்தியங்களை ஏற்க மறுப்பவன்.
ஆனால் தங்கதுடனான உறவில் இவனது அனைத்து தர்க்கங்களும் சிக்கலடைந்தபடியே வருகின்றன. இச்சை என்ற எளிய கோலத்தில் தொடங்கும் அவன் தஙத்துடனான உறவில் மெல்ல மெல்ல காதலின் உயர்படி நிலைகளைக் கண்டடைகிறான். அனால் இவனது குணவார்ப்பின் எதிர்நிலைதான் தங்கம்.அவள் இறுதி வரை சமநிலை குலையாத ஆளுமை வார்ப்பு பெற்றவள்.அவளது காதல் எத்தகையது...அது உணர்ச்சிகளின் முகடுகளும் அகடுகளும் அற்ற ஒரு நேர்க்கோடாக இருக்கிறது.ஆனால் அவன் நாவல் முழுக்க இடறிக் கொண்டே இருக்க சலனமற்ற ஒரு புதிராக தங்கம் இறுதிவரை நிலைகொள்கிறாள். இந்த முரண் இவ்விருவருக்கிடையே வாழ்வின் அற்புதமான பகடையாட்டத்தை ஆடிக் காண்பிக்கிறது.இங்கு தான் ஜி. நாகராஜன் வாழ்க்கையை மிக அரிய கோணங்களில் நமக்கு வாசித்து காட்டுகிறார்.


மேலும்...
உயர்ந்த கலைப்படைப்புகள் பசி, காமம் முதலிய மனிதத்துவத்தின் மிக ஆதாரமான பிரச்சனைகளையே மைய்யமிடுகின்றன. சிலம்பு மணிமேகலை போன்ற தமிழ்ப் பேரிலக்கியங்கள் இதன் உயர் லட்ச்சிய வடிவங்கள் எனலாம். மனிதன் வரலாற்றின் வழி வந்தவன். இயற்கையிலிருந்தும் உயிரியல்புகளிலிருந்தும் மிகச் சேய்மைபட்ட கலாச்சார வாழ்வியலை வந்தடைந்திருப்பவன். இந்த நவீன மனிதனுக்குள் உள்ளுறைந்திருக்கும் தொல்பண்பையும் உயிரிச்சைகளில் கலாச்சார மயக்கங்களற்ற நிர்வாணத்தன்மையையும் வெளிக்கொணரத்தான் சிறந்த கலைப்படைப்புகள் முயல்கின்றன. மனிதனுக்குள் காணாமல் போன தொல்மனிதனை தொட்டுவிட ஒருவகையில் இலக்கியங்கள் முயல்கின்றன. ஜி. நா. வின் குறத்தி முடுக்கு உள்ளிட்ட படைப்புகள் இந்த திசையில் செல்வதாகத்தான் படுகிறது. குறத்தி முடுக்குவில் மீண்டும் மீண்டும் பேசப்படுவது காமமும் பசியும்தான்.


மனித உடல் ஓர் உயிரியல் அமைப்பு மட்டுமல்ல.அது ஒரு சமூக வரலாற்று பண்பாட்டுக் கட்டமைப்பாக இருக்கிறது.சமூக மதிப்பீடுகளை கடத்தும் ஊடகமாகவும் கலாச்சார புனைவுகளைக் கற்பிதங்களை ஏற்று அதன் ஒழுங்குமுறைகளை , நடத்தை விதிமுறைகளை பிரதிபலிக்கும் பாத்திரங்களாகவும் மனித உடல்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டுக்க்களிலிருந்து விடுவித்து மனித உடலின் ஆதி இயற்கைத்தன்மையை, வேட்கையை அதன் குழந்தைமையை, இசைமையை மீட்ட பாலியலை மையமிடும் சிறந்த கலைப்படைப்புகள் முயல்கின்றன. பெண்ணியவாதிகள் இக்கோணத்தில் உடலரசியல் என்ற கூரிய பரிமாணத்தில் பேசி வருவதை நாம் அறிவோம்.
குறத்தி முடுக்குவில் ஆளப்படும் பாலியலும் இந்த தளத்தை நோக்கி நகர்ந்து வருவதை உணர முடிகிறது .மனித சமூகத்தில் காமம் ஒரு இயற்கை நடவடிக்கையாயன்றி பால் சார், பண்பாடு சார் புனைவுகளும் அதிகாரங்களும் கொண்டவையாய் நிகழ்கிறது. பதற்றங்களும் தன்முனைப்பும் நிறைந்த இந்த நாடகீயமான காமத்தின் ஆழத்தில் மனிதத்துவத்தின் துடிப்புமிக்க களங்கமற்ற பால் விழைவை ஜி. நா.வின் எழுத்து எப்போதும் மீட்டெடுக்கிறது. அரசியல்மயமாகப்பட்ட பாலியலை திரைவிலக்கி அதன் ஆழத்தில் துளிர்க்கும் ஆதிமனத்தின் அன்பை அது எப்போதும் துளிர்க்கச்செய்கிறது.



குறத்தி முடுக்குவின் எந்த கதாபாத்திரங்களும் முழுமையாக குணவார்ப்பு பெற்றவையல்ல. அவை மூட்டமான நிழலுருவங்களாகவே வந்து செல்கின்றன, ஒவ்வொரு வாழ்விலிருந்தும் ஜி. நா காண்பிப்பது ஒரு வெட்டுக் காட்ச்சி மட்டுமே. அனால் அவை இட்டு நிரப்ப வேண்டிய கணமான இடைவெளிகளை வாசகத் தரப்பில் நிறுத்துகின்றன.ஒவ்வொரு பாத்திரமும் காமத்தின் ஆழத்தில் ஒளிரும் காதலையும் காதலின் பாசாங்கில் மறைந்துள்ள காமத்தையும் மாறி மாறி வெளிப்படுத்தும் தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.


பாலியலை கலையின் ஓர் உயிர்ப்பகுதியாக வைத்துப் பேணிய கலைப்பாரம்பரியம் நமது எனினும் பாலியலை மனித அறிவாதிக்கத்திலிருந்து விடுதலை செய்யும் முயற்சிகள் மிக அரிதாகவே நிகழ்ந்துள்ளன. இருபதாம் நூற்றாண்டு புனைகதைப் பரப்பை நோக்கும்போது கு.ப.ரா., தி.ஜா., ஜெயகாந்தன் முதலிய முன்னணிப் படைப்பாளிகள் நம் நினைவுக்கு வரலாம். கு.பா.ரா பாலியலைத் தாண்டிய இலட்சிய நிலைப்படுத்தப்பட்ட காதலைத்தான் முன்வைக்கிறார். தி.ஜா. பாலியலை எழுதும்போது அதில் ஒரு நிலமானிய கால ரசனை ரேகையொன்று ஓடுவதை மறுப்பதற்கில்லை. ஜெயகாந்தன் பாலியலை கையாளும்போதெல்லாம் வெளிப்படும் அவரது அறிவார்த்த முனைப்புகள் சலிப்பூட்டக் கூடியது. முழுக்க முழுக்க ஒரு விளிம்பு நிலை வாழ்விலிருந்து, பாலியலின் அரசியலை உரித்து, மனித இயல்பூக்கங்களை பேச விழையும் ஜி. நாகராஜனின் படைப்புலகம் முன்குறித்த எதன் சாயலுமற்ற முன்னுதாரணங்களற்ற புதிய பிரதேசத்தை அறிமுகப்படுத்துகிறது.



குறத்தி முடுக்குவின் இறுதிப் பகுதி ஒரு உருவகமான காட்சியோடு நிறைவுறுகிறது. தனக்குள் காதலின் பேரலைகளை எழுப்பிவிட்டு தன் பழைய கணவனோடு வாழச்சென்றுவிட்ட தங்கத்தைத் தற்செயலாகப் பார்க்க நேர்ந்த அந்தப் பத்திரிக்கையாளன் அவளது வீடு வரை சென்று ஒரு விருந்தாளியின் அசௌகரியத்தோடும் அந்நியத்தோடும் இருந்துவிட்டு அறைக்குத் திரும்புகிறான். தங்கத்தின் தேர்வுகள் அவனது தர்க்கங்கள் அனைத்தையும் சிதறடிக்கின்றன. வாழ்வின் எந்த நிலையிலும் குலையாத அவளது சமனிலை
முன் அவன் கொந்தளிக்கிறான். ஆற்றாமை..ஏமாற்றம்…அறையில் அவனுக்குத் தூக்கமில்லை.இறங்கி வெளியே நடக்கிறான்… தொலைவில் ஒரு மின்னல் வெட்டுகிறது..’ தொலைவில் நிகழ்ந்த ஒரு மின்பரிமாற்றம்’ என்கிறார் ஜி. நா. அது அவனுக்குள் நிகழ்ந்துள்ள பெரும் குணமாற்றத்தை சூசகமாக உணர்த்துகிறதா. மின்னல் வெட்டிவிட்டது.ஆனால் இடிச்சத்தம் இன்னும் கேட்கவில்லை. தான் எவ்வளவு மாறிவிட்டோம் என்பதை அவன் உணர்கிறான்.ஆனால் அதன் தர்க்கம் இன்னும் அவனுக்குப் புலப்படவில்லை. மழை அடித்துப் பேய வேண்டும் என நினைத்துக்கொள்கிறான். அவன் மனதை நிரப்பும் அந்த கணமான வெக்கையை அது ஒன்றே அப்போதைக்குப் போக்க முடியும்.

Sunday, April 18, 2010

ஜார்ஜ் சிர்ட்டெஷ் பற்றின சிறுகுறிப்பு - ஆர்.அபிலாஷ்



ஜார்ஜ் சிர்ட்டெஷ் தனது எட்டாவது வயதில் ஹ்ங்கெரியிலிருந்து அகதியாக இங்கிலாந்து வந்தார். ஓவியராக பயிற்சி பெற்ற சிர்ட்டெஷ் 1973-ஆம் ஆண்டில் ஆங்கிலத்தில் கவிதைகள் பிரசுரிக்க ஆரம்பித்தார். இவரது முதல் கவிதைத் தொகுப்பான The Slant Door ஜெப்ரி பேபர் மெம்மோரியல் பரிசை வென்றது. பிறகு சோல்மொண்டெலெய் விருது இவருக்கு வழங்கபபட்டது. இங்கு தரப்பட்டுள்ள கவிதைகளை உள்ளடக்கின அவரது Reel தொகுப்பு 2004-இல் டி.எஸ்.எலியட் பரிசை வென்றது. ஹங்கெரியன் மொழியிலிருந்து செய்துள்ள ஆங்கில மொழியாக்கப் பணிக்காக இவர் European Poetry Translation Prize மற்றும் Derry Prize ஆகிய பரிசுகளை வென்றார். Golden Star விருதும் வழங்கப்பட்டது. குழந்தைகளுக்கான எழுத்திலும் ஆர்வம் காட்டியுள்ளார். தற்போது மல்யுத்தம் பற்றி நாவல் எழுதி வரும் சிர்ட்டெஷ் University of Ear Anglia-வில் கவிதை மற்றும் படைப்பிலக்கியம் பயிற்றுவித்து வருகிறார். மேலும் படிக்க: http://www.georgeszirtes.co.uk/

ஜார்ஜ் சிர்டெஷ் கவிதை. தமிழில் ஆர்.அபிலாஷ்

(சமீபத்தில் நடந்த பனிமுலை இலக்கிய கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை)


அம்மா



சுவர்க்கத்தில் இருந்து கீழ்வரும் முதல் கை அவள் கை
அவள் உனக்கு மேல் வட்டமிடுகிறாள். அது வரப்போகும் வாழ்வின்
முன்னுணர்வு, தரை இறங்க தயாராகும் ஒரு பறவை।


உன் அம்மாவின் வெம்மை. அவள் முலைகள் மென்மையின்
தீவிரம் பற்றின மனப்பதிவு, பிறகு அவளது
கைமுட்டின் எலும்புகள்। கன்னங்கள். கழுத்து. அவள்


தலையின் அசைவு, இடுப்பின் முன்பின் ஆட்டம். அவள் முலைக்கண்களின்
மிருதுவான கூம்புகள். அவள் தொப்புளின் புதிர்த்தன்மை. வெப்பம்
குளிர்மை, ஈரம், உலர்வு। பால் மணங்களும், பிரமோன்களும்.


எங்கு நீ ஆரம்பிப்பாய்? பாதங்களை விரல்கள் கிச்சுகிச்சு மூட்டுவதிலா
உதடுகள் தோலில் படுவதிலா? உயரத் தூக்கப்பட்டு
பத்திரமானதற்கு பின் சுழற்றப்படுவதிலா? தெருவின் இரைச்சல்களிலா?
உனது எளிய பேரிடர்களில்? உனது சொந்த அழுகை
உன் தலைக்குள் எதிரொலிக்க கேட்பதில்?

ஏதோ தொலைந்து போய்
ஏதோ ஆழ புதைக்கப்பட்டு உள்ளது நீ பார்க்க முயலும் விழியின் அடியில், உன் நுரையீரலுக்கு உள்ளே
படிந்த தூசு போன்ற மெல்லிசாக ஒன்று,
உன் உடலின் மடிப்புகளுள் வார்ப்பு போல திணிக்கப்பட்ட ஒரு வரலாறு.
வானொலி முணுமுணுக்கிறது। ஒரு மணி திடீரென முழங்குகிறது.


தரைக்கு மேல், கூரை மேல் நகரும் ஒளி.
ஒரு பறவை சரசரக்கிறது. அவளது கூந்தல். ஜன்னல் மீதாக
முட்டிடும், வீறிடும் ஒரு மரத்தின் கிளைகள்.

ஜார்ஜ் சிர்டெஷ் கவிதை. தமிழில் - ஆர்.அபிலாஷ்

(சமீபத்தில் நடந்த பனிமுலை இலக்கிய கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதை



அப்பா என்னை ஒரு வயலுக்கு குறுக்காக ஏந்திச் செல்கிறார்

அப்பா என்னை ஒரு வயலுக்கு குறுக்காய் ஏந்திச் செல்கிறார்।

அது இரவு, மேலும் அங்கு பனி நிறைந்த பதுங்கு குழிகள் உள்ளன।

கெட்டியான சேறு. இதுவரை என்னவென எனக்குத் தெரியாத ஒன்றிலிருந்து
மறைந்து இருப்பதில் நாங்கள் கவனமாக உள்ளோம்।

பிறகு நான் நடக்கிறேன்; நம் நால்வரிடையே
இடைவெளி உள்ளது। போக வேண்டிய இடத்துக்கு போகிறோம்.

நான் கனவில் இதையெல்லாம் கண்டேனா, இந்த பேய்க் காட்சியை,
ஆந்தை சிமிட்டிய, கழுதை பேசிய
நூறு ஏக்கர் காட்டை?
படுக்கையில் நான் வசதியாக சுத்தமாக
கிடக்க, கைகள் கோர்த்து நாம் நிலப்பரப்பின் மீதாக மிதக்கிறோமா?

எனக்கு முன்னதாக அப்பா நகர்கிறார், ஒரு அந்நிய ஏறத்தாழ அருகின இனத்தைப் போன்று; பேரச்சத்தில் வயலுக்கு குறுக்காக
எனதான முழுஅழிவை நோக்கி அவரைத் தொடர்கிறேன்।

வெடித்த நிலப்பகுதி மேலாக மிதக்கின்றன எங்கும்
ஆவிகள். மழைப்பருவ குளிர்மை எங்களையும்
அவற்றையும் வேறுபடுத்தவில்லை। அப்பா சுற்றிலும் நோக்குகிறார்;

புன்னகைக்கிறார் பிறகு திரும்புகிறார்। இந்த இடத்தில்
எங்களுக்கு எந்த வேலையும் இல்லை, ஓசையின்றி, தொடர்ந்து நகர்வதன்றி।

வெற்றுப் பக்கம் ஒன்றை தமக்குப் பின் விட்டுப் போகும்
தொலைந்த உருவங்கள் மற்றும் கறுத்து உறைந்த நிலம்।

அவை குறுக்கே கடக்கின்றன ஒரு மேடையை கடப்பது போல்.

மழைப் பிரிய‌ம் - லாவண்யா சுந்த‌ர‌ராஜ‌ன்

மழைப் பிரிய‌ம்
=============

புகைப்ப‌ட‌ வைப‌வ‌ல‌ட்சுமி
கையுதிர்த்த‌ பொற்காசுக‌ள்
அவ‌ள் கால‌டியில் புதிதாக‌
ம‌ல‌ர்ந்திருந்த‌ ரோஜா பூவின்
ம‌க‌ர‌ந்த‌ துக‌ள்களாக‌
ஒளிர்ந்திருந்த‌ன‌
சாலையோர‌ம் ப‌ச்சையாய்
வசீக‌ர‌ புத‌ர் ஒன்றில்
அதிய‌மாய் ஆங்காங்கே
இள‌ம்ப‌ச்சை பூக்க‌ள்
காற்றிசைத்தால்
சிற‌க‌சைத்து கொஞ்ச‌ம் ப‌ற‌ந்து
மீண்டும் அதே இட‌த்தில் பூத்த‌ன‌
ப‌ட்டாம் பூச்சிக‌ளாய்
நில‌வு ம‌றைத்த‌
கோபுர‌ வெளிச்ச‌ங்க‌ளாக‌
புதிர் கோப‌ங்க‌ள்
பிரிய‌ங்க‌ளை ம‌றைந்து
காட்டும் மாய‌ உல‌கில்
காட்சிப் பிழையாக‌
என் ம‌ழைப்பிரிய‌ம்
ந‌னைக்க‌விய‌லாத‌ தூர‌த்தில்
ந‌தியோர‌‌ ம‌ண‌லாக‌
உன் பிரிய‌ம்
வ‌ற‌ண்டு போயிருக்க‌ கூடும்

எப்போதும் முந்துவது… - செல்வராஜ் ஜெகதீசன்


வழக்கமான தன் விளையாடுமிடத்தில்

முதல் வண்டியில் என்றும் முந்தி ஏறும் மகன்

இடைப்பட்ட ஒன்றில்

இன்றைக்கு அமர்ந்தது

முன்னே இருப்பவனை முழுதாய் பார்க்க என்றான்

எப்போதும் முந்துவது என்பதை விடுத்து

மற்றவரைக் காண்பதென்பதில்

என் வரைக்கும்

ஏக .


Saturday, April 17, 2010

குஜராத் 2002 வழக்கு- மோடி இழக்க இருப்பது மயிரா தலையா- ராஜாஜி.




பூகோள ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் நெருக்கமான ஈழத்தமிழர் மீதான இன அழிப்பையே மறந்து விட்ட தமிழ்ச் சமூகத்துடன் 2002 ஆம் வருடம் குஜராத்தில் நடந்த இஸ்லாமியர் மீதான படுகொலைகள் குறித்து பேச இயலுமா என்று தெரியவில்லை. மக்களின் இந்தப் பொது மறதி போக, மோடியின் தொடர் தேர்தல் வெற்றிகள் மோடியை அம்பலப்படுத்தி பேசுவோரிடம் ஒரு மன ரீதியான பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் படுகொலைக்குப் பிறகான இந்த எட்டு வருட கால வெளியில் மோடியை வேறொரு பரிமாணத்தில் மக்களிடம் கொண்டு செல்ல சில சக்திகள் தீவிரமாக முயன்று வந்துள்ளன. மோடியை வளர்ச்சியின், முன்னேற்றத்தின் உருவகமாகச் சித்தரிக்கும் முயற்சிகள் நிறைவேறின.பன்னாட்டு முதலாளிகளின் வேட்டைகாடான குஜராத், கார்பரேட் கம்பெனிகளின் சொர்க்கமாக் கொண்டாடப்படுகிறது. இப்படி தனது எதிர்ப்பாளர்களை வாயடைக்க வைத்த மோடிக்கு குஜராத் 2002 படுகொலை வழக்கு பெரும் சவாலாக இருந்தது, குஜராத் படுகொலை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு , மோடி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியவுடன் ஊடகங்கள் இச்செய்திக்கு பெரிய அளவில் முக்கியத்துவம் அளித்தன. Times Now, NDTV போன்ற ஆளும் வர்க்க விசுவாச ஊடகங்கள் கூட இந்த விவகாரத்தில் ஈடுபாடுகாட்டின.
இந்த சம்மன் மீதான மோடி தரப்பு பதற்றத்தை சற்று எதார்த்த நிலைமைகளுடன் உரசிப் பார்ப்பது அவசியம். திருட்டு , வழிப்பறி போன்றவற்றில் சந்தேக நோக்கோடு அழைத்து செல்லப்படும் அடித்தட்டு வர்க்க இளைஞர்கள் பெரும்பாலும் வீடு திரும்பவதில்லை.. அவர்களின் உடல்கள் பிற்பாடு அரசு மருத்துவமனைகளின் வாயிலாக உறவினர்களிடம் வழஙப்படுகிறது. 2000 முஸ்லிம் மக்களின் படுகொலையோடு தொடர்பு படுத்தப்படும் மோடி அடிப்படை அறத்தின் படி குற்றவாளி. ஆனால் அவர் ஆஜராக ஒரு வார கால அவகாசம் அளிக்கப்பட்டது. சட்டத்தின் ஓட்டைகளைக் கண்டுபிடிக்க இந்த அவகாசம் மிகப் பெரியது.எல்லோரும் மோடி ஆஜராக மாட்டார் என்று நினைத்திருந்த நேரத்தில் மோடி வேறு மாதிரி முடிவெடுத்தார். தான் ஒன்றும் சட்டத்தை மதிக்காமல் இல்லை என்று காட்ட ஒரு சந்தர்ப்பமாக மோடிக்கு இது அமைந்தது. மோடியின் இந்தப் போலிப் பணிவை பெரிய அளவிற்கு தம்பட்டம் அடித்தது பா।ஜ.க தரப்பு.

(டீஸ்டா சேதல்வாத்)
எனினும் 9 மணி நேரம் மோடி விசாரிக்கப்பட்டது முக்கியத்துவம் வாய்ந்ததே என்று கருதுகிறார் , மோடி மீதான வழக்குகளை சிறப்பு புலனாய்வு குழுவிற்கு மாற்றக் காரணமாயிருந்த ‘குடிமக்களுக்கான உரிமைகள்’ அமைப்பைச் சேர்ந்த டீஸ்தா சேதல்வாத் அவ்ர்கள்। சாகச ரசனைக்காக மலிவான எதிர்மறைப் பண்புகளை கதாநாயகனுக்கு அளிக்கும் சினிமா இயக்குநர்களைப் போல அடிப்படை அறத்தின்படி குற்றவாளியான மோடி குறித்து கிளம்பிய சுவாரஸ்யமான தினசரி ஊடகச் செய்திகள் அவருக்கு ஹீரோ இமேஜை அளித்தன. சோர்வும் அலுப்பும் தரக்கூடியதான இந்த நீண்ட மாரத்தான் வழக்கை அச்சுறுத்தல் , அவமானங்களுக்கு அஞ்சாமல் இந்தளவுக்கு நகர்த்திக் கொண்டு வந்த பத்திரிக்கையாளரும் மனித உரிமைப் போராளியான டீஸ்தா சேதல்வாத்தின் பெயர் இந்த ஊடகங்களில் லேசாக முனுமுனுக்கப்பட்டது, அவ்வளவுதான்.உண்மையில் இந்த விவகாரத்தில் மோடியின் மீதான ஊடகங்களின் மிகை வெளிச்சத்தின்முன் சேதல்வாத்தின் செயல்பாடு அமிழ்ந்துபோனது.
ஆர்.ஸ்.ஸ். தனது சோதனைச் சாலைகளாக தேர்ந்துகொண்ட குஜராத் ம்ற்றும் மராட்டியம் போன்ற மாநிலங்களில் அவர்களை எதிர்கொள்வது அவ்வளவு எளிதான காரிமல்ல. பெரியாரின் பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் ஆர்.ஸ்.ஸ் ஐ எதிர்க்க ஒருவர் பயன்படுத்தும் சொல்லை குஜராத்திலோ மும்பையிலோ நினைத்துப் பார்க்க முடியாது. அவர்களுடைய சமூக உளவியலிலேயெ வலதுசாரித் தன்மை ஊறிப்போயுள்ளது. .ஃபாஸிச உளவியலை மிகச் சாதரணமாகத் தமது சமூகப் பார்வையில் கொண்ட மக்கள், வன்முறைக்குப் பயன்படுத்த தயாராக வைக்கப்பட்டிருக்கும் உதிரி வர்க்கம், மோடியின் மூர்க்கத்திற்கு முன்னர் அடிபணிந்த ’நியாயவான்கள்’ ரத்தன் டாடா, அமிதா பச்சன் போன்ற கனவான்களின் ஆதரவு என இந்தப் பட்டியல் மலைப்பைத் தரும். இதற்கு மத்தியில் கோலியாத்தை வீழ்த்திய தாவீதைப் போல ஒன்பது மணி நேர விசாரனைக்கு நடுவில் மோடியை சிறப்பு புலனாய்வுக் குழு அதிகாரிகளிடம் சிறுநீர் கழிக்க அனுமதி வாங்க வைத்த டீஸ்த்தா சேதல்வாத் ஒரு நிஜ நாயகி.
26/11 என்று நாமகரணம் சூட்டப்பட்டுள்ள அஜ்மல் கசாப் மீதான விசாரனை முடிவு பெற்று தீர்ப்பு விரைவில் வெளிவர இருக்கிறது। மரண தண்டனை என்பது கிட்டத்தட்ட அவருக்கு உறுதியாகியுள்ளது। 60 பேரை கொலை செய்த குற்றத்தில் பங்குபெற்ற கசாபிற்கு மரண தண்டனை எனும்போது 2000 முஸ்லீம் மக்களை கொடூரமானமுறையில் வெட்டியும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியும் கொலை செய்த மனித குல விரோதிகள் தண்டிக்கப்படுவதில் ஏன் தாமதம் என்று அறவியல் சார்ந்து எழும் கேள்விக்கு இந்திய குற்றவியல் சட்டம் பதில் வைத்திருக்கிறதா என்று தெரியவில்லை. கசாப்பிடம் கையாளப்பட்ட நார்க்கோ அனாலிஸிஸ் மற்றும் வேறு பல கொடிய விசாரனை முறைகளில் மோடி விசாரிகப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.

ஆர்.ஸ்.ஸ் பின்னிருந்து இயக்கும் பல்வேறு வன்முறைகளில் தண்டிக்கப்பட்டவர் என்று எவருமில்லை. பாபர் மசூதி இடிப்பு வழக்கு இன்னும் ஆரம்ப நிலையிலேயே நொண்டிக்கொண்டிருக்கிறது. 93- மும்பை வன்முறை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ் இன் வன்செயல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்த சிறீ கிருஷ்னா கமிஷன் அறிக்கையோ, ஆர்.ஸ்.ஸ் இன் குண்டு வெடிப்பு பிரிவான ‘அபினவ் பாரத்’ , அமைப்பை விசாரித்து வந்த ஹேமந்த் கர்க்க்கரேவின் கொலைக்கு பின்னர் மண்ணிலே புதைக்கப்பட்டுள்ளது. பிரவீன் தொகாடியா, பிரமோத் முதாலிக் போன்ற காவி உடை தரித்த கிரிமினல்கள், செல்லுமிடங்களில் எல்லாம் வன்முறைத் தீயை பற்ற வைக்கின்றனர்.ஒரிசா கிறிஸ்த்தவ பழ்ங்குடிகள் இன்னமும் தமது சொந்த இருப்பிடஙளுக்குத் திரும்ப முடியவில்லை. கர்னாடகத்திலும் சிறுபான்மைனருக்கு பாதுகாப்பற்ற சூழல் உருவாகியுள்ளது. கிறித்தவர்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடந்தேறுகின்றன.. குடிமைச் சமூகம், பத்திரிக்கைகள், அரசு, போலீசு , நீதித்துறை ஆகியவற்றை சாட்சியாக வைத்தே இக்குற்றங்கள் அனைத்தும் நடந்துள்ளன. இக்குற்றஙகள் யாவும் எல்லோரும் அறிய பொதுவெளியில் நிகழ்த்தப்பட்டவையே.

இந்த குறிப்பிட்ட வழக்கும் பெரிய நம்பிக்கையைத் தரவில்லை. முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஜாஃப்ரியின் கொலை வழக்கில் அரசின் மெத்தனப் போக்கு கவனிக்கத்தக்கது. மோடி மீது இன்னமும் ஒரு f.i.r. கூட பதிவு செய்யப்படவைல்லை. சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைமை அதிகாரி ஆர்.கே.ராகவன் கூற்றுப் படியே கூட, எதிர்காலத்தில் f.i.r. பதிவு செய்யும் அதிகாரம் சி.பி.கு வுக்கு இருக்கிறதா என்பதில் தெளிவில்லை. இந்த வழக்கு உட்பட குஜராத் படுகொலை வழக்குகள், அரசின் மெத்தனம் என்ற திசையில் செல்லுமானால் அதிக பட்சமாக மோடிக்கு சி.பி.கு. வின் மோதிர விரல்களால் குட்டு மட்டுமே கிடைக்கும். அது டான்ஸி நில மோசடி வழக்கில் ஜெயலலிதாவிடம் மனசாட்சி படி நடந்திருக்கலாம் என ஆலோசனை வழங்கிய நீதிமன்ற ஆணையின் வலிமையைத்தான் ஒத்திருக்கும். சாக்கியா ஜாஃப்ரி போன்று உறவுகளை இழந்த எண்ணற்றவர்களின் பிரார்த்தனை, டீஸ்த்தா சேதல்வாத் போன்ற மனித உரிமை செயல்பாட்டாளர்களின் விடாமுயற்சி, நாடெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகளின் ஏக்கப்பெருமூச்சு , கவித்துவ நீதியின் மீது இயல்பான நாட்டம் கொண்ட எளிய மக்கள், என்று அனைவரின் குவிமையமாக இருக்கும் குஜராத் படுகொலை வழக்குகள் இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு ஒரு அமிலச் சோதனையாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.

மீன் மொழியும் நில‌வும் - லாவ‌ண்யா சுந்த‌ர‌ராஜ‌ன்


மீன் மொழியும் நில‌வும்
======================

அன்று ஒரு நாள்
நில‌வை ம‌ட்டும்
சாட்சியாக்கி
நீர்நிலையொன்றில்
மீனாகி நீந்தி இருந்தோம்
நெடும் நேர‌ம்
நெடுந்தொலைவு
விடிய‌ல் வ‌ந்த‌தும்
ப‌ற‌வையாகி ப‌ற‌ந்து போனாய்
உன‌த‌ருமை கூடு நோக்கி
நீ கைம‌ற‌தியாய்
விட்டு சென்ற‌
சில‌ சிற‌குக‌ளை
வெட்டி எடுக்க‌ இய‌லாத‌
செதில் நினைவுக‌ளை
வ‌ன‌மெங்கும் நிறைந்திருந்தேன்
வாசனை திர‌விய‌ங்க‌ள் பூசி
ஒற்றை நில‌வென்ன‌ செய்யும்
மீன் மொழி
புரிவ‌தில்லை அத‌ற்கு
புரிந்திருந்தால் ஒருவேளை
சிரிக்காம‌ல் புல‌ர்ந்திருக்குமது

Tuesday, April 13, 2010

மூன்று பேர் புலியைப் பார்க்க போகிறார்கள் - மாதவி



மூன்று பேர் புலியைப் பார்க்க போகிறார்கள்

மூன்று பேருமே நிஜப் புலி பார்த்திராதவர்கள்

மூன்று பேருமே புலியின் கோடுகள் குறித்த விசித்திர கற்பனைகளும் தகவல் அறிவும் கொண்டவர்கள்

மூன்று பேருமே ... (ஒன்றும் இல்லை)

மூன்று பேரில் ஒருவன் கோட்டோவியங்களில் பழகியே புலியுடன் சினேகமாவன்

இரண்டாமவன் கார்டூன்களிலும் ஊர்வலப் பதாகைகளிலும் புலியுடன் பரிச்சயமானவன்

மூன்றாமவன் குறைந்து வரும் புலி எண்ணிக்கை குறித்த தீவிர அக்கறை கொண்டவன்

முதலாமவன் புலியைப் போன்றே நடக்க, ஓட, பாய, பதுங்கத் தெரிந்தவன்

இரண்டாமவன் புலியைப் போன்றே கர்ஜிக்கவும், புலியைப் போலல்லாது பேசவும் தெரிந்தவன்

மூன்றாமவன் புலிகளின் அங்கீகாரமற்ற தகவல்களஞ்சியம், கூட்டியும் குறைத்தும் பலவாறாக புலி எண்ணிக்கையே வெளியிடுவதே புலி இனத்தை காப்பாற்ற நல்ல வழி என்று நம்புபவன்

முதலாதவன் ...இரண்டாதவன் ...மூன்றாதவன் ...குறித்து மேலும் எந்த தகவலும் இல்லை

அவர்கள் அசல் புலியை பார்க்க போனார்கள் என்பதைத் தவிர

மிருகக் காட்சி சாலையிலிருந்து திரும்பின

முதல் மற்றும் இரண்டாமவனுக்கு பின்னால் குதத்தில் புலி வால் ஆடியது

புலியை மிக நெருங்கி பேசியதால் அது பரிசளித்தது என்று பேசிக் கொண்டார்கள்

மூன்றாமவன் திரும்பவே இல்லை

அவனை யாரும் பிறகு பார்க்க இல்லை

கண்காணா இடத்தில் இருந்து இதை அவன் எழுதிக் கொண்டிருப்பதாக

கடைசியாக வந்த தகவல் தெரிவிக்கிறது

கூண்டுக்குள் இருந்தது நிஜப்புலியே அல்ல புலி எண்ணிக்கையில் இதனால் ஒன்று குறைந்து விட்டது

என்பதை அவன் கவிதையின் சேதியாகவும் உத்தேசிக்கிறான்

வால் முளைத்தவர்களை எந்த எண்ணிக்கையில் சேர்ப்பது என்ற குழப்பம் காரணமாய் அவன் தன் கவிதையை முடிக்காமலே வைத்திருக்கிறான்

ஆனாலும் ஒன்று குறைந்தால் ஒன்று கூடும் என்ற தன் சூத்திரம் நிரூபணமானதில் அவனுக்கு மகிழ்ச்சியே