Sunday, March 28, 2010

அழகிரிக்கு நோபல் பரிசு பரிந்துரை: மண்ணுண்ணி



அதாவது நமது தலைவருக்கு நோபல் பரிசு பரிந்துரைக்கலாம் என்று சொல்ல வருகிறேன். அதற்கான காரணங்கள் மிகக் கச்சிதமாக அவரது சமீபத்திய ஜூ.வி பேட்டியில் காணக் கிடைக்கின்றன. பேட்டியின் முக்கிய அம்சங்கள் மட்டும் சுருக்கமாக.

தயாநிதி மாறன் முன்னர் மத்திய தொலைதொடர்பு அமைச்சராக இருந்த போதும் இப்போது ஜவுளி அமைச்சராகவும் தினமும் சன்.டீ.வியில் தோன்றி சாதனைகள் செய்த போது அழகிரி ஏன் மந்தமாக உள்ளார் என்ற சந்தேகம் நமக்கெல்லாம் இயல்பாகவே ஏற்பட்டது. அப்புறம் தேர்தலில் அவர் விடுத்த உன்னை மூன்று லட்சத்து மூன்னூற்று மூன்றரை ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடிப்பேன் என்பது போன்ற சூளுரைகள் ஏன் தன் அமைச்சக வேலை பற்றி சொல்வது இல்லை என்று கூட ஒரு துணுக்கு நமக்கெல்லாம் ஏற்பட்டது. ஐயா சொன்னதை செய்பவர் என்பதால் ஒவ்வொரு முறையும் செய்து காட்ட வேண்டிய அவசியம் ஏற்படாது. சற்றே நினைவுகளை கிளறினால் அவர் வட நாட்டு ரயில்வே நிலையத்தில் மாட்டித் தவித்த தமிழர்களை காப்பாற்றியது நினைவில் வருகிறது. என்ன, ஆபத்து சமயத்தில் அமைச்சரையே இம்மாதிரி விசயத்தில் அணுகும் வசதி படைத்த அவர்கள் உயர்தட்டினர் தாம். அழகிரி குறுக்கிட்டிரா விட்டால் அடுத்த நாள் விமானத்தில் ஊர் திரும்பி இருப்பார்கள் என்று சில குசும்பர்கள் சொன்னதை யார் கேட்டார்கள். அடுத்து, மதுரையில் கால்செண்டர் நிறுவனங்கள் நடத்துவதற்கு ஊக்குவிப்பதாகவும் அதற்கு தன் சொந்த கட்டிடங்களையே பயன்படுத்தலாம் என்று ஒருமுறை அறிவித்தார். ஒரே அடியில் நற்பெயர், வாடகை மற்றும் மாங்காய் என்று மீண்டும் அதே அன்னிய சக்திகள் முணுமுணுத்ததை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் இதுவரை சொன்னதெல்லாம் தலைவரின் தற்போதைய சாதனையோடு ஒப்பிடிட்டால் இதோ பிய்த்தெடுக்கிறேனே இதற்கு சமம் (மன்னிக்கவும் கோபம் வந்தால் உடனே வன்முறையில் ஈடுபட வேண்டியதாகிறது. பாதகங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம்). நோபல் தகுதியுள்ள விசயம் அது.



”உர விவாதங்களின் போது நீங்கள் மாயமாகி விடுவதாக எதிர்க்கட்சிகள் புகார் சொல்லுகின்றனவே” என்று ஜூ.வி நிருபர் கேட்கிறார். “எதிர்க்கட்சிகளை” கவனியுங்கள். தமிழகத்தில் இப்படி அவசியமின்றி கேள்வி கேட்கிற தொல்லையை வேறு யார் செய்கிறார்கள். அதற்கு தலைவர் பதிலுக்கு தனது சாதனைப் பட்டியலை தருகிறார்.
• ”இதுவரை எந்த அமைச்சரும்” (இந்த ’இதுவரை உலக வரலாற்றில் முதன்முதலாக’ என்று சொல்வது ஒரு தமிழ்க்கலாச்சார அடையாளம்) செய்திராத உரமானியத்தை விவசாயிகளிடமே நேரடியாக கொண்டு சேர்க்கும் திட்டத்துக்கான ஆரம்ப வேலைகளை ஆரம்பித்திருக்கிறேன்.

• இந்தியா முழுவதும் நலிந்து கிடக்கும் எண்ணற்ற உரத் தொழிற்சாலைகளை திறக்க நடவடிக்கை எடுத்திருக்கிறேன்.

• ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க மருந்து கம்பனிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறேன்.

• இவ்வளவு செய்த பிறகு நான் மாயமானேன் என்றால் நியாயமா?



இஸ்லாமிய நாடுகளில் இருந்து படைகளை பின்வாங்கப் போவதாய் சொன்னதுமே ஒபாமாவுக்கு சமாதான நோபல் வழங்கப்பட்டது. நம் தலைவரும் மேற்சொன்ன சாதனைகளை இன்னும் செய்து முடிக்கவில்லை என்றே ஒன்றே போதுமே அவருக்கும் சின்னதாய் ஒரு நோபல் வழங்கப்பட. தமிழன் எத்தனை நாள் தான் இதற்கெல்லாம் ஏங்கி தனக்குத் தானே பட்டங்கள் வழங்கிக் கொண்டிருப்பது?



ஒரு தந்தையாகவும் தலைவரின் சாதனைகள் யாருக்கும் சளைத்தது இல்லை. தமிழ்ப்படம் என்ற துணிச்சலான படத்தை தயாரித்து மொத்த கோடம்பாக்கத்தையும் கலவரப்படுத்தியதற்காக துரைதயாநிதிக்கு தீவிர இலக்கிய கர்த்தாக்கள் விரைவில் விழா எடுக்கப் போவதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.



நமீதாவின் டேட் கூட கிடைத்து விட்டது. அவர் மேடையில் துள்ளி நடனமாடிய படியே ஒரு கையால் புத்தகங்கள் வெளியிடுவார்; மறுகையால் கிழித்தெறிவார். இப்படிப்பட்ட துரைஅழகிரிக்கு தொகுதி விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக திருமண நிச்சயதார்த்தம் செய்து வைத்திருக்கிறார் தலைவர். இதன் மூலம் ஜெ எட்டு தலைமுறைக்கு மீண்டு வர முடியாமல் செய்வோம் என்று அச்சுக்கு வராத சேதி ஒன்றில் சூளுரைத்திருக்கிறார் தலைவர். குடும்பக் கடமைகளை செவ்வனே நிறைவேற்றுவது தமிழ்த்தலைவர்களுக்கு தனிச்சிறப்பு அல்லவா! அமெரிக்கர்களுக்கு இதன் மதிப்பு புரியாவிட்டாலும் நோபல் எம் கைப்பிடிக்கு வெகு அருகில் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

4 comments:

  1. நல்ல பகடி. ஆனால்,

    ".. அமெரிக்கர்களுக்கு இதன் மதிப்பு புரியாவிட்டாலும் நோபல் எம் கைப்பிடிக்கு வெகு அருகில் தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்."

    அமெரிக்கர்களுக்கும், நோபல் பரிசுக்கும் என்ன சம்பந்தம்?

    ReplyDelete
  2. இந்தக் குசும்புக்கெல்லாம் பின்னூட்டினால் ஆட்டோ வரும் என்று பயம் போலும்... ஒண்ணுத்தையும் காணோம்:)

    ReplyDelete
  3. நண்பர் கரிகாலரே, அமெரிக்கா தானே ரொம்ப நாளாக நோபலை தீர்மானித்து வருகிறது. இர்விங் வாலஸின் நோபல் பரிசு குறித்த தெ பிரைஸ் நாவலை வாசித்து பாருங்கள்

    ReplyDelete
  4. கழகக் கண்மணிகள் பயப்பட வேண்டாம். அனைவரும் வாக்களியுங்கள். 80% பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete