
1..
இன்று நம் வீதியில்
மாலையின் நடனம் புதிரானது.
கலவையான உணர்ச்சிளால் யாக்கப்பெற்ற அதன் ஒப்பனைகள் முன்
நம் பாதைகள் தடுமாறுகின்றன.
பருவத்தின் மணற்கடிகைக்குள் மாறி மாறி சலித்த சொற்கள்
இந்த கூசும் ஒளியில் வெறும் மணலாய் உறுத்துகின்றன.
உன் வாசலில் உதிரும்
மரமல்லிகளை அள்ளிச் செல்ல
இந்த மாலையில் பித்தம் கொண்டிருக்கிறது காற்று.
பறவைகள் சென்றுவிட்டதும்
மங்கிய இலைகளில் பூத்த செவ்வரளிகள் முன்
அந்தியின் இமைகள் மெல்லக் கூம்புவதும்
எனக்குப் புரிகின்றன.
ஒரு பருவம் முடிவுக்கு வருகிறது,
எனில் ஒவ்வொரு பருவத்தின் விடைபெறலும்
இத்தனை நாடகத்தோடுதானா.
இரவின் புராதன ரேகைகள்
இந்த வீடுகளின் மேல் படிகையில்
மௌனத்தின் நட்ச்த்திரங்கள் பற்றிக்கொள்கின்றன.
அறுபட்ட இககணத்தில்
எனது ஆழங்களுக்குள் நான் பாய்கையில்
சுக்கு நூறாகச் சிதறுகிறது என் பிரபஞ்சம்..
..........
2..
சடைத்துக் களைத்த மழை
சாம்பல் மதியத்தின் மீது
இச்சையின் கண்ணீர் துளிகளை விசிறுகிறது.
நீர்ப்பரப்பின் மறைவும் வெங்காயத் தாமரைகளின் முகாந்திரமற்றப் படர்வுமான
புறநகர ஏரியின் பின்னணியில் அவள் வீடு திரும்புகிறாள்
ஈரம் கணக்கும் ஆடைகளோடும்
இளம் முருங்கைப் பிசினாய்ப் பிசிபிசுத்த காலத்தோடும்.
தனிமை வீடும்
அதன் ஒரே சொல்லாய் நீண்ட தனிச்செம்பருத்தியும்
இரகசியமாய் கவனிக்கின்றன
தொலைவில் மறுகரைமெலே மௌனமாகக் கடக்கிறது
பறக்கும் புறநகர ரயில்.
எப்போதைக்குமான நகர் நீங்கலென
அது அடிவான வெறுமைக்குள் ஊடுருவுகிறது.
எட்டாவது முறையாக
அவள் கைப்பேசியில் துடிக்கும் அந்த எண், அவள் உறுதி...
எதையும் சொல்லாத இந்த மதியத்தின்மேல் படிகிறது
காலத்தின் சாம்பல்.
சலனமுறும் காற்றில் தென்னைகள் சலிப்படைகின்றன.
வெளிறும் இச்சிறுபொழுதில் மாறும் பெரும்பருவங்களை அவை அறிந்துள்ளன.
துலக்குமுறும் வானின் கீழ்
கடலடியில் புரளும் ஒரு சிப்பியென
அவள் நகர்கிறாள்.
No comments:
Post a Comment